20120321

சங்கீதம்

 

நாளைய கனவை இன்றே காண நான் தயாராய் இல்லை.

இன்று மடையன் என்பதற்காய்

இவ்விரவை இழக்கவும் தயாராய் இல்லை!

 இலட்சியமேறிய சொற்களின் பிரலாபம் இங்கு வேண்டாம்!

சலிப்பையோதும் சாக்கடை ஞானிகளின்

சொல்ஜாலங்கள் இங்கு வேண்டாம்!



சிரிக்க மறந்த அறிஞரின் செவிகளில்

என் வேதங்களை ஓதுவேன்.

மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்

இன்னோர் பிறவிக்காய்

 ஒருகணத்தைத் தானும் ஈய நான் தயாராய் இல்லை!

என் செயல்களிற்கு விளக்கத்தை

எந்நூலிலும் தேடப் போவதில்லை.



அவர்கள்  தெருநாய்கள் இயங்கும் விதிகளை

தங்கள் நூல்களில் தேடிக் கொள்ளட்டும்!

அவர்கள் மறக்கவும் மறைக்கவும் முயலும் சேற்றைப் பாடுவேன்!



என்னிடத்தில் எந்தச் செய்தியுமில்லை

அவா;களின் வசனங்களை ஒப்புவிக்க

நான் தயாராயில்லை என்றும் கூறுங்கள்

எந்த அழுத்தத்தையும் நான் வெறுக்கிறேன்.



போ!

உன் எஜமானிடம் சொல்

நான் கடற்கரையின் கண்வீச்சில் கரந்துறையும் சிறுநண்டு

பேர் வேண்டாம் முகம் வேண்டாம்

பிலாத்துக்களே

சிலுவையில் அறையப்பட்ட நான் தேவகுமாரனில்லை!



என் அவாவெல்லாம் மொழிகளைத் தாண்டி

முகங்களைக் காண வேண்டும்!

பிரமிப்பை ஊட்டும் இன்னோர் ஜீவனைச் சந்திக்க வேண்டும்!



நான் சொல்வேன் என் ஆத்மாவில் இரைச்சல் இல்லை!

இன்னமும் சொல்வேன்

இன்னுமென் ஆத்மா இசைக்கிறது!





30.111990

கருத்துகள் இல்லை: