20161226

குண்டலினி ஆற்றுப்படை


அலைகள் நடுவிலோ கண்காணா தேசத்திலோ
கற்று மயங்கியோ காட்டின் நடுவிலோ
நூல்களின் இடையிலோ நாட்கள் தொலைய
வந்தவழியை இரைமீட்கும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்

திரைகடலோடியுங் கிடைத்திலதோ
மேலோடி மிகுகொண்டும் கிடைத்திலதோ
பேர்சொல்ல பிள்ளையும்
பெருமை பேசவொரு தத்துவமாய்
அலைகளில் தத்தளிக்கும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்


காயாய் கிடந்தவுடல் கனிந்து போகையில் தான்
போதிசத்துவன் கண்டு பயந்த மூப்பும் பிணியும் வந்துற்றது.
வாசல் வழியே விரும்பா வரவாய்
அஞ்ஞாத வாசம் உற்றபோதே

உடல் தீராவலியேற்றது என்றன் மனவலிபோல
என் பிணி என் வாழ்வு என்றானது தத்துவம்
வாழ்வு நான்சுவராய்; போனதொருகாலை
தைரியந் திருந்து உளநோயுற்ற காலை
தன்னார்வத் தொண்டன் யோக நூலொன்று தந்தான்


வாழ்வை பழிக்கும் சித்தாந்தம் மறுக்கும் தத்தவம் இருந்தது
'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்'
உரத்து ஒலித்தேன்
'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்'

என் நிலத்தோய் என் நிலத்தோய்
மூச்சும் பயிற்சியுமாய் உற்ற பிணி போனபின் உணர்ந்தேன்
உடல்தான் தத்துவ ஊற்று
மூப்பும் பிணியும் தள்ளிப் போகும்
சாகாகலை யோகமென்றுணர நீளப்பயணித்தேன்

கூட்டுப்புழவாய் புரண்டாலும் வண்ணத்தாய் மலரும் வாழ்வு வாய்க்கும்
சுருண்டு கிடக்கும் உள்ளுறை சக்தியே குண்டலினி
பிராணன் வளர்க்க பெருகும் சக்தி
தேவதையாய் ஆத்திகம் பேசும்
இயங்கியலாய் நாத்திகம் பேசும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்

20011101

கருத்துகள் இல்லை: