20161226

கோடையின் மகன்

நிலத்தையறிய முன்னரே நீரையறிவேன்.

பலமாதம் பனிக்குடத்தில்
புதையுண்டு கிடந்த நினைவுகள் இன்றில்லையெனினும்
நீரை ஜென்ம பந்தமாய் நேசித்து வந்துள்ளேன்.

பூவுலகுக்கு பாய்ந்த கணத்தில் பிணைக்கப்பட்ட
கோடைநில நினைவுகள்; தொடர்கின்றன
தொப்பூள் கொடியறிந்தும் தொடர்புகள்
ஆயுளுக்கும் தொடர்வது போல்.

தொட்டளைந்த மண்ணின்
வெகுதொலைவே எஞ்சிய நாட்கள்
நஞ்சேறிய குருதியாற்றில்
நாடி நரம்புகளில் துயரின் சாயல்

கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்னமே
புரட்சிகர உலகு முன்னால் புணரக் காத்திருக்கென்ற
அரசியல் செய்த காலத்துக்கு முன்னமே
நீரைநோக்கிய பயணம் தொடங்கிற்று.

ஆகாய கங்கைகள் நிலநதிகளுடன்
சங்கமிக்கும் கதைகளை நானறிவேன்.
கோடைகால வெள்ளம்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள்

பால்நிறப் பொய்கைபோல் பற்றை நடுவே
வழி பார்த்திருந்தது நச்சு வட்டம்
பல்லாயிரம் பாதச்சுவடுகள் அழுந்திய பாதையில்
நடக்க நடக்க நிழலும் சுட்டது

குளிர்ந்திருந்தாலும் கோடையின் மகனல்லவா

கொடுமைகளை நான் அறிவேன்.

கருத்துகள் இல்லை: