20161226

பிரிவு

இதயம் அழுந்தித் துடிக்கிறது எதையோ இழந்தாற்போல்

நெஞ்சம் அதிர்கிறது

நாம் பிரிந்து போகிறோம்


தவிர்க்க முடியா இந்த பிரிவும் இந்த வாழ்வும்

பள்ளி உறவுகளும் நினைவுகளும்

நாங்கள் பிரிகிறோம்

நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்


கற்பனை கனவுகளை ஏந்திய ஓடங்களின் அசைவு

கனத்துப்போன நினைவுகள் ஏந்திய ஓடங்கள் எங்கெங்கோ

ஆறுகள் கடல்கள் தாண்டப பிரிந்து பிரிந்து தனித்து

நீண்ட பாதை காடுகள் மலைகள் ஆறுகள் பாலை நிலங்கள்

இன்னும் எத்தனையெத்தனை

எவற்றைப் பற்றியும் அஞ்சவில்லை


பிரிவின் வேதனையை எப்படியுரைக்க

உங்கள் கரங்களை அழுத்திப்பிடித்துக் கொள்கிறேன்.

எங்கள் உறவுகளில் ஆழ்ந்த அர்த்தம் பரவட்டும்

நான் எனது பாதைக்கு செல்ல ஆயத்தமாகிறேன்.

நல்லது மிக நல்லது நாம் விடை கொள்வோம்


19880314



திசை , முகம் 43 (1989.11.03) பக்கம் 9, 
 K. பாபு என்ற வீட்டிலும் ஊரிலும் அறிந்த பெயரில் வெளிவந்தது




சூரியவெளி

வயல் நிலத்திலுள்ள மலையே
நீயுன் எல்லைகளிளெல்லாம்
செய்த பாவத்தின் நிமித்தம்
நானும் ஆஸ்திகளையும்
உன் எல்லா பொக்கிஸங'களையும்
உன் மேடைகளையும் சூறையிடுவிப்பேன்.
                                           (ஏரெமியா 17 அதிகாரம்)

சமவெளியில் எழுந்த மலைபற்றி
ஊரில் எல்லோரும் குசுகுசுக்கிறார்கள்.
சூரியவெளியில் உலவும் மனிதர்கள் பற்றி ஏராளம் வதந்திகள்
வல்லை முனியப்பர் கோவிலடியில் கிளையெறிந்த சவுக்குகளைச் சிதைத்துப்
போன மாரியில் எழுந்த மலையது.

உச்சியி;ல் பொங்கிய மக்னா குழம்பு
உப்பளத்துக்கு செல்லும் பாதையூடு
சுடலை மரங்களுடு
வழிவமைத்து
ஊரைச்சுற்றி மண்முகடாய் எழுந்தது.

வயலிடைக் கிடந்த கோவில் வெறிந்சென்றது.
வயலிடை உலவும் புதிய முகங்கள் பற்றி
ஏதேதோ சொல்கிறார்கள்.
ஆவதார ரகசியங்களை அறிவிக்க வந்த தூதர்கள் என்கிறாhர்கள்.
உளவாளிகள் என்கிறார்கள்
புல்லுப்பிடுங்கிச்செல்லும் பெண்டுகள் விலத்தியே செல்கிறார்கள்.
அவர்கள் சன்னதி கோவிலில் காவடி எடுத்ததாய்
அடியார் மடத்தில் அன்னம் உண்டதாய்
வல்லைப்பாலத்தடியில் தூண்டில் போட்டதாய்

உடனுக்குடன் ஊருக்குள் கதை வருகிறது.

புதர் மண்டிப்போன மனைகள் வேட்கையுடன் அழைக்கின்றன.
தெரிந்தவர்கள் எங்கெங்கோ ஓதுங்கி விட்டனர்.
ஓமென்று போன உறவுகள் நாலுவரிகளுடன் நின்றுபோயின.
கிழவர்கள் கதைப்பதை யாரும் விரும்புவதில்லை
மகிந்தார்பரிக்க சுருக்கம் விழுந்த காலங்கள் விடுமாவென்ன

இறுகிப்போன முகங்களுக்கப்பால் பூப்போல மனிதர்கள்
இருந்தும் நெருங்கத்தான் முடியவில்லை.

சமவெளியில் அறுவடை முடிந்து விட்டது.
பனியில் கிடக்கும் வைக்போல் போர்களிடையே
சிற்றெறும்புகளின் எளிய வாழ்க்கை.
வரப்புகளில் எலிகளின் தானியக் களங்சியங்கள்
வானத்தெல்லை வரை மஞ்கள் பாரித்துள்ளது.
தூரத்தே கரும்புள்ளியாய்
புலம்பெயரும் சைபீரியப் பறவைகள்
நீளும் சிறகுகளில் இட்டுக்கட்டிய கதைகளுக்கெல்லாம்
பதிலுரைக்காமல் பறந்து போகிற அழகு
நான் மடத்துபுலம் கள்ளுத்தவறணையில்
தன்னந்தனியே

மறையும் சூரியனில்
நேற்று முளைத்த மலை பளபளக்கிறது
என் சிறகுகளை ஒடித்துவிட்டு

30 ஓகஸ்ட் 1997

ரிவிரெச 1, 2 என்ற சங்கேத பெயர்களுடன்( ரிவிரெச என்பது சூரியவெளி என பொருள்படும்) மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் 96 முற்பகுதியில் யாழ்ப்பாணம் முற்றாக இராணுவகட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
வல்லை என்பது வடமாரட்சியை பிறபகுதியுடன பிரிக்கும் பரந்த வெளி.
வெளியீடு: கலைமுகம் (கலை 14 முகம் 1)

நீதிதேவர்

இனவாதப் புழுதியில் தலை புதைத்திருந்தது

இந்நிலத்து தீய்ய்ப்பறவை மட்டுமல்ல

செங்கோலால் வருத்தியது நீதிதேவருமென்.


2002

குண்டலினி ஆற்றுப்படை


அலைகள் நடுவிலோ கண்காணா தேசத்திலோ
கற்று மயங்கியோ காட்டின் நடுவிலோ
நூல்களின் இடையிலோ நாட்கள் தொலைய
வந்தவழியை இரைமீட்கும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்

திரைகடலோடியுங் கிடைத்திலதோ
மேலோடி மிகுகொண்டும் கிடைத்திலதோ
பேர்சொல்ல பிள்ளையும்
பெருமை பேசவொரு தத்துவமாய்
அலைகளில் தத்தளிக்கும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்


காயாய் கிடந்தவுடல் கனிந்து போகையில் தான்
போதிசத்துவன் கண்டு பயந்த மூப்பும் பிணியும் வந்துற்றது.
வாசல் வழியே விரும்பா வரவாய்
அஞ்ஞாத வாசம் உற்றபோதே

உடல் தீராவலியேற்றது என்றன் மனவலிபோல
என் பிணி என் வாழ்வு என்றானது தத்துவம்
வாழ்வு நான்சுவராய்; போனதொருகாலை
தைரியந் திருந்து உளநோயுற்ற காலை
தன்னார்வத் தொண்டன் யோக நூலொன்று தந்தான்


வாழ்வை பழிக்கும் சித்தாந்தம் மறுக்கும் தத்தவம் இருந்தது
'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்'
உரத்து ஒலித்தேன்
'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்'

என் நிலத்தோய் என் நிலத்தோய்
மூச்சும் பயிற்சியுமாய் உற்ற பிணி போனபின் உணர்ந்தேன்
உடல்தான் தத்துவ ஊற்று
மூப்பும் பிணியும் தள்ளிப் போகும்
சாகாகலை யோகமென்றுணர நீளப்பயணித்தேன்

கூட்டுப்புழவாய் புரண்டாலும் வண்ணத்தாய் மலரும் வாழ்வு வாய்க்கும்
சுருண்டு கிடக்கும் உள்ளுறை சக்தியே குண்டலினி
பிராணன் வளர்க்க பெருகும் சக்தி
தேவதையாய் ஆத்திகம் பேசும்
இயங்கியலாய் நாத்திகம் பேசும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்

20011101

சிறையிருத்தல்

ஏலோய்ய்யீ..
ஏன் என்னைக் கைவிட்டீர்
உச்சஸ்தாயியில்  எழுந்தது இறுதி ஓலம்
வெள்ளி இரவில் ஆவி ஒடுங்கிற்று
மூன்று நாட்களுக்குள் மீளவும் உயிர்த்தது
இரண்டாம் வாழ்வுக்காய்

வானம் கைதுசெய்தபின்
மண்ணுடனான சம்பந்தம் அற்றுப்போனது
வற்றாத நதியென்ற மாயையும் அழிந்தது
காட்டாறாய் பாய்ந்த நிலமெல்லாம்
வெட்டாந்தறையாய் வெடித்துலர்ந்தது

தலைகீழாய்த் தொங்கி நீரி;ல் மூச்சிழந்து
காவடியாடி நகமிழந்து உடல்சிதைந்து
உணர்விழந்து உயிர் சோர்ந்தது.
கரைசேர முடியாமல் கடல் சேர்ந்தன ஜீவன்கள்

வலியும் நிராசையும்
நெடுநாட்கனவு சிதைந்த வேதனையும்
சுமந்து வரும் இந்நதி எங்கிருந்து ஆரம்பிக்கின்றது.
குக்கிராமத்தின் குடிசையில் இருந்தா
நகரத்தின் முடுக்கில் இருந்தா
வனத்தின் ஒற்றையடிப் பாதையில் இருந்தா
தீவெங்கும் பரந்திருக்கும் சோதனைச்சாவடியில் இருந்தா

தமையாட்கொண்டு நோயும் பிணியும் ஈய்ந்து
வேருடன் பிடுங்கிபெறிந்த
காவல்ஜந்துக்களின் கீர்த்தியினை உச்சரித்துலவும் பாதிமனிதர்கள்
கொடுப்பதை உண்டு, உறங்கி, உயிர்நிறுத்தி
உளப்புண்ணுடன் நாட்கடத்தும் முகமிழந்த மனிதர்கள்

எப்போதோ நாகரிகத்தின் தொட்டிலாய் இருந்த
நதியொன்று அருகே ஓடுகிறது
பெரும் மதில்களுக்கப்பால் பால்மரங்களின் பச்சைநிறம்
கற்பூமியின் அவலமூச்சில்
அவலம் நிறைந்த  முகங்களிடையே
வாழ்வின் அர்த்தம் புரிகிறது.


காலத்தை தேவன் என்றதும் பாசத்தை கயிறு என்றதும்
எடுத்துரைப்பார் எவருமின்றி புரிகிறது
குரு இல்லை பீடம் இல்லை
கல்லால மரத்தடியில்
சொல்லாமல் சொன்ன பொருளும் புரிகிறது
திரும்பவும் திரும்பவும் வேதனை கதவைத் தட்டியது
வெறுத்து திறந்த கணத்தில்
காலவெள்ளம் காபாலத்தை நிறைத்தது

வயல்வெளிகள் கண்களுக்ககப்படவில்லை
பிடித்தமான கடலுமில்லை அலைகளில்லை
கண்களின் சலனத்திரையில்
கரையும் காட்சியில் இனிமையில்லை
ஆதரவாய் தோள்தடவ ஆருமில்லை
நெகிழ்ந்துறங்க நிழலில்லை

வெளியில் இருப்பதாய இரண்டாம் வாழ்வுக்காய்
எத்தனை மாதம் காத்திருப்பது இந்த கருப்பையில்
இரண்டாம் வாழ்வைக் காணாமல்
கொலையான சகாக்களின் ஓலம் இன்னமும் ஒலிக்கின்றன
ஆறவழியின்றி ஆன்மா அடங்கும்

அன்புற்றமைந்த வாழ்வின்
எச்சமாய் வரும் ஓரிரு கடிதங்கள்
நினைவுப் பாதையில் தலைசாய இரவு அழிகிறது
இளமையும் தான்.



2001.11.01

களுகங்கையின் ஓரத்தில் றப்பர் மரங்களிடையே மல்வத்தையில் அமைந்துள்ளது களுத்துறை சிறை. 1997-12-12 இல் சிறையதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் சிங்கள தண்டனைக் கைதிகள்( அச்சு குத்தியவர்கள்) பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்து தமிழ் கைதிகளை தாக்கினர். தர்மலிங்கம், சிவம், ஜெகன் ஆகியோர் வெட்டிக்கொல்லப்பட்டனர். பிற்பாடு 2000 தை 6ம் 7ம் திகதிகளில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனர். இதன் போது யேசுதாசன், சிறீகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

கோடையின் மகன்

நிலத்தையறிய முன்னரே நீரையறிவேன்.

பலமாதம் பனிக்குடத்தில்
புதையுண்டு கிடந்த நினைவுகள் இன்றில்லையெனினும்
நீரை ஜென்ம பந்தமாய் நேசித்து வந்துள்ளேன்.

பூவுலகுக்கு பாய்ந்த கணத்தில் பிணைக்கப்பட்ட
கோடைநில நினைவுகள்; தொடர்கின்றன
தொப்பூள் கொடியறிந்தும் தொடர்புகள்
ஆயுளுக்கும் தொடர்வது போல்.

தொட்டளைந்த மண்ணின்
வெகுதொலைவே எஞ்சிய நாட்கள்
நஞ்சேறிய குருதியாற்றில்
நாடி நரம்புகளில் துயரின் சாயல்

கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்னமே
புரட்சிகர உலகு முன்னால் புணரக் காத்திருக்கென்ற
அரசியல் செய்த காலத்துக்கு முன்னமே
நீரைநோக்கிய பயணம் தொடங்கிற்று.

ஆகாய கங்கைகள் நிலநதிகளுடன்
சங்கமிக்கும் கதைகளை நானறிவேன்.
கோடைகால வெள்ளம்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள்

பால்நிறப் பொய்கைபோல் பற்றை நடுவே
வழி பார்த்திருந்தது நச்சு வட்டம்
பல்லாயிரம் பாதச்சுவடுகள் அழுந்திய பாதையில்
நடக்க நடக்க நிழலும் சுட்டது

குளிர்ந்திருந்தாலும் கோடையின் மகனல்லவா

கொடுமைகளை நான் அறிவேன்.

செம்புலம்




1
அறுத்துக்கொண்டு போன பட்டத்தை தேடித் திரிந்த
பாதை நெடுகிலும் கிடந்தது
எல்லா கற்பிதங்களையும் கலைக்கும் முள்

2
தோப்பவிழ்ந்த மந்தியாய்
தனித்தலைந்த காலம்
பல்மிருகமாய் பாம்பாய்
பேயாய் கணங்களாய் வழிநடந்தனர்
செம்புலக் கனவூகள் சிதைந்து போனபின்
எத்திசைக் காற்றோ அத்திசை போயினர்

3
வெறுமையான வானத்தில்
தனித்துப்போனஉருவமேயற்று சிதைந்த
ஒரு முகிலைப் போல்.
வருவதும் போவதுமான எல்லா ஊர்திகளிலும்
பொழுதுகளை கரையவிட்டு


பழகு மொழி மறந்து பரிபாசை பயின்று.
ஓடு மீனும் விட்டு உறு மீனும் விட்டு.
கொக்கும் இல்லை.
அதன் குத்தும் இல்லை.
ஆற்றுநீர் விழுந்தாலும்
அலைகள் உப்புக்கரிக்கின்றன

4

கால இடுக்குகளில் புதைந்த முகங்கள் எழுகின்றன முன்பின்னாக
வெற்றிக்கொக்கரிப்பின் (Triumphalism ) உரைக்கல்லான பெண்ணுடல்

‘இடி விழ’ ‘பற்றி எரிய’ ‘பாம்பு கடிக்க’
‘பாழ்பட்டுப்போக’ ‘பரிநாசமடைய’
சாபங்களை தொடர்கின்றன
வெற்றுடல் மீதான வெறி கொள்கை வழிப்பட்டது
சடங்காக்கப்பட்டதும் மகிமைப்படுத்தப்பட்டது
ஆழியாநிழலாய் தொடரும் வெறிக்கூச்சல்
புல்லாய் பூடாய் புழுவாய்
மரமாய் கல்லாய் கழிகிறது காலம்

வெற்றிக் கொக்கரிப்பின் பின்னின்று
அன்பெய்யூம் பகைமறப்பெனும் பெருங்கதையாடல்
காலத்தை பின்னதைக்கிறது.

‘வரப்புயர’ என்றாணை பிறந்தது
நீர் உயர்ந்தது நெல் உயர்ந்தது.
பின் போய் விட்டது
பொறுமையிழந்து பிச்சையெடுக்க

5
சலனமுற வைக்கிற கீதங்கள்
தொடரும் செம்புலக் கனவூகள்
தானியற்றிய பெருநீர்ச் சுழிகளில்
தனையிழக்காமல் பாய்கிறது நதி
மணற்கும்பிகளுக்கு பின்னே
பின்னதைக்கும் அலைகளுடன் பெருங்கடலாடல்.
மனதை தைக்கும் கடலின் விளிம்பு
ஆட்புல எல்லைகள் தாண்டியூம்
வளைந்து போகிறது ஆழி







2012.04.10






குவார்னிகா- 41வது இலக்கிய சந்திப்பு

20160719

கபாலி !

'கப்'பென அடிக்கும் அழுகலின் வீச்சம்

அழுகலை உண்டு திரண்டெழும் ரஜ்ஜ்ஜன்னீ !

போற்றி போற்றியென பரிந்ததிரும் பார்தீனியம்

தலைதலையென ஒத்ததிரும் டார்த்தீனியம்


நீளும் அழுகல்வளரியின் நீழலில் கரைகிறது

முழுமையையும்

முள்ளிவாய்க்காலில் தொலைத்த மண்.



17.07.2016














குறிப்பு

1987 இந்திய படைவருகையுடன் ஈழத்தில்; பரவியவண்ணம் இருக்கும் நச்சுசெடி பார்தீனியம்
தமிழ் சிறுகதைபொன்றில் உருவகமான நச்சுசெடி டார்த்தீனியம்