20161226

செம்புலம்




1
அறுத்துக்கொண்டு போன பட்டத்தை தேடித் திரிந்த
பாதை நெடுகிலும் கிடந்தது
எல்லா கற்பிதங்களையும் கலைக்கும் முள்

2
தோப்பவிழ்ந்த மந்தியாய்
தனித்தலைந்த காலம்
பல்மிருகமாய் பாம்பாய்
பேயாய் கணங்களாய் வழிநடந்தனர்
செம்புலக் கனவூகள் சிதைந்து போனபின்
எத்திசைக் காற்றோ அத்திசை போயினர்

3
வெறுமையான வானத்தில்
தனித்துப்போனஉருவமேயற்று சிதைந்த
ஒரு முகிலைப் போல்.
வருவதும் போவதுமான எல்லா ஊர்திகளிலும்
பொழுதுகளை கரையவிட்டு


பழகு மொழி மறந்து பரிபாசை பயின்று.
ஓடு மீனும் விட்டு உறு மீனும் விட்டு.
கொக்கும் இல்லை.
அதன் குத்தும் இல்லை.
ஆற்றுநீர் விழுந்தாலும்
அலைகள் உப்புக்கரிக்கின்றன

4

கால இடுக்குகளில் புதைந்த முகங்கள் எழுகின்றன முன்பின்னாக
வெற்றிக்கொக்கரிப்பின் (Triumphalism ) உரைக்கல்லான பெண்ணுடல்

‘இடி விழ’ ‘பற்றி எரிய’ ‘பாம்பு கடிக்க’
‘பாழ்பட்டுப்போக’ ‘பரிநாசமடைய’
சாபங்களை தொடர்கின்றன
வெற்றுடல் மீதான வெறி கொள்கை வழிப்பட்டது
சடங்காக்கப்பட்டதும் மகிமைப்படுத்தப்பட்டது
ஆழியாநிழலாய் தொடரும் வெறிக்கூச்சல்
புல்லாய் பூடாய் புழுவாய்
மரமாய் கல்லாய் கழிகிறது காலம்

வெற்றிக் கொக்கரிப்பின் பின்னின்று
அன்பெய்யூம் பகைமறப்பெனும் பெருங்கதையாடல்
காலத்தை பின்னதைக்கிறது.

‘வரப்புயர’ என்றாணை பிறந்தது
நீர் உயர்ந்தது நெல் உயர்ந்தது.
பின் போய் விட்டது
பொறுமையிழந்து பிச்சையெடுக்க

5
சலனமுற வைக்கிற கீதங்கள்
தொடரும் செம்புலக் கனவூகள்
தானியற்றிய பெருநீர்ச் சுழிகளில்
தனையிழக்காமல் பாய்கிறது நதி
மணற்கும்பிகளுக்கு பின்னே
பின்னதைக்கும் அலைகளுடன் பெருங்கடலாடல்.
மனதை தைக்கும் கடலின் விளிம்பு
ஆட்புல எல்லைகள் தாண்டியூம்
வளைந்து போகிறது ஆழி







2012.04.10






குவார்னிகா- 41வது இலக்கிய சந்திப்பு

கருத்துகள் இல்லை: