20161226

சூரியவெளி

வயல் நிலத்திலுள்ள மலையே
நீயுன் எல்லைகளிளெல்லாம்
செய்த பாவத்தின் நிமித்தம்
நானும் ஆஸ்திகளையும்
உன் எல்லா பொக்கிஸங'களையும்
உன் மேடைகளையும் சூறையிடுவிப்பேன்.
                                           (ஏரெமியா 17 அதிகாரம்)

சமவெளியில் எழுந்த மலைபற்றி
ஊரில் எல்லோரும் குசுகுசுக்கிறார்கள்.
சூரியவெளியில் உலவும் மனிதர்கள் பற்றி ஏராளம் வதந்திகள்
வல்லை முனியப்பர் கோவிலடியில் கிளையெறிந்த சவுக்குகளைச் சிதைத்துப்
போன மாரியில் எழுந்த மலையது.

உச்சியி;ல் பொங்கிய மக்னா குழம்பு
உப்பளத்துக்கு செல்லும் பாதையூடு
சுடலை மரங்களுடு
வழிவமைத்து
ஊரைச்சுற்றி மண்முகடாய் எழுந்தது.

வயலிடைக் கிடந்த கோவில் வெறிந்சென்றது.
வயலிடை உலவும் புதிய முகங்கள் பற்றி
ஏதேதோ சொல்கிறார்கள்.
ஆவதார ரகசியங்களை அறிவிக்க வந்த தூதர்கள் என்கிறாhர்கள்.
உளவாளிகள் என்கிறார்கள்
புல்லுப்பிடுங்கிச்செல்லும் பெண்டுகள் விலத்தியே செல்கிறார்கள்.
அவர்கள் சன்னதி கோவிலில் காவடி எடுத்ததாய்
அடியார் மடத்தில் அன்னம் உண்டதாய்
வல்லைப்பாலத்தடியில் தூண்டில் போட்டதாய்

உடனுக்குடன் ஊருக்குள் கதை வருகிறது.

புதர் மண்டிப்போன மனைகள் வேட்கையுடன் அழைக்கின்றன.
தெரிந்தவர்கள் எங்கெங்கோ ஓதுங்கி விட்டனர்.
ஓமென்று போன உறவுகள் நாலுவரிகளுடன் நின்றுபோயின.
கிழவர்கள் கதைப்பதை யாரும் விரும்புவதில்லை
மகிந்தார்பரிக்க சுருக்கம் விழுந்த காலங்கள் விடுமாவென்ன

இறுகிப்போன முகங்களுக்கப்பால் பூப்போல மனிதர்கள்
இருந்தும் நெருங்கத்தான் முடியவில்லை.

சமவெளியில் அறுவடை முடிந்து விட்டது.
பனியில் கிடக்கும் வைக்போல் போர்களிடையே
சிற்றெறும்புகளின் எளிய வாழ்க்கை.
வரப்புகளில் எலிகளின் தானியக் களங்சியங்கள்
வானத்தெல்லை வரை மஞ்கள் பாரித்துள்ளது.
தூரத்தே கரும்புள்ளியாய்
புலம்பெயரும் சைபீரியப் பறவைகள்
நீளும் சிறகுகளில் இட்டுக்கட்டிய கதைகளுக்கெல்லாம்
பதிலுரைக்காமல் பறந்து போகிற அழகு
நான் மடத்துபுலம் கள்ளுத்தவறணையில்
தன்னந்தனியே

மறையும் சூரியனில்
நேற்று முளைத்த மலை பளபளக்கிறது
என் சிறகுகளை ஒடித்துவிட்டு

30 ஓகஸ்ட் 1997

ரிவிரெச 1, 2 என்ற சங்கேத பெயர்களுடன்( ரிவிரெச என்பது சூரியவெளி என பொருள்படும்) மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் 96 முற்பகுதியில் யாழ்ப்பாணம் முற்றாக இராணுவகட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
வல்லை என்பது வடமாரட்சியை பிறபகுதியுடன பிரிக்கும் பரந்த வெளி.
வெளியீடு: கலைமுகம் (கலை 14 முகம் 1)

கருத்துகள் இல்லை: