20120321

அவலம்


பறந்து போகிறேன் ஜன்ம பூமியே

உலகைப் பார்க்க வேண்டும்!

இளமை உலர்வதன் முன்

உன்மேல் படர வேண்டும்.


டிசெம்பர் 93


பகுதி - அ : கிளாலி




முன்னுரிமை பெற்றவர் முன்னால் நிற்க!

நலிந்தவர் பயந்தவர் ஒதுங்கி நிற்க!

ஓட்டிகள் மந்திரம் ஓதுக!

நுரைத்தெழும் ஜலமே வழிவிடு!


மூடுண்டு போனது யாழ்நாடு

வழியும் போனது

எழுந்தன அவலக் குரல்கள்!

வானம் கேட்டது

திசைகள் யாவும் கேட்டன!

காற்றும் மழையும் பனியும்

நிலவும் இருளும் கேட்டன

நீண்ட காலமாய்!

போகும் பாதையில் சுழிகள்

உண்டென வானம் உரைத்தது.

வானொலி உரைத்தது

உயிரும் பணமும் ஈர்க்கும்

கரும் பொருள் உண்டென!

உரப்பையும் பயணப் பொதியும்

அரைக்கால் சட்டையும்

நனைந்த கோலமாய்த் தேவர்கள்

கண்டங்களை இணைத்த கடல் வாசிகள்

பனிக்கண்டங்களில் உலவிய

அதிமனிதர்கள்.

வீடு வாசல் தோட்டம் துறவு

மா பலா அனைத்தும் ஒப்புக்

கொடுத்தோடும்

பயணிகள்

பேச்சற்றுப் போனவர் கதைப்பவர்

வணிகர் குழந்தைகள்

பெற்றோர் எனத் தென்னை மரத்திடை

அடங்கிக் கிடந்தனர்.



கிளாலிக் கரை

கூவி விற்போர் வியாபாரம் செய்க!

கூடிக் கதைப்போர் ஒன்று சேர்க!

தனித்திருப்போர் கனவு காண்க!

இரவு வரட்டும்

இருளும் வரட்டும்

காற்றே அமைக!


போகுமுன் பெயர்களைப் பதிவு செய்க!

கடலிலே அலை மோதும்

வள்ளமெழுந்து வீழும்!

வரிசைகள் முக்கியம்

வள்ளங்களின் எண்களும் முக்கியம்

இருவராய் மூவராய் அறுவராய் எனினும்

வரிசைகள் முக்கியம்!

வீசும் கந்தகக் காற்றும்

நாறும் சேறும்

எரிச்சல் வயமாய்ப் பயணிகள்

வரிசைக்கு

வள்ளத்துக்கு

இடத்துக்கு

முந்துக

வரிசைகள் மீறுக!

ஒழுங்குகளைக் கலைத்திடுக!

காவல்துறை வரட்டும்!

அவரவர் உடமைக்கு

அவரே பொறுப்பு!

உயிருக்கும் அவரே தான்!

நல்லது

இனி ஒட்டிகள் வருக!

தெற்கே யமனின் திசையில்

பதினைந்து பதினைந்தாய்

அழைத்துச் செல்க!

நோய் தரும் ஜலத்தினை

வானம் ஈய்ந்தது.

வெற்றிடங்களை ஈய்ந்த பாரிய வெளி

போர் உலாப் போன பல மாரி காலங்கள்

பிஞ்சும் பூவுமாய்

சிசுக்களைக் காவு கொண்ட ஏரி.

மண் தின்ற கடலிடையே

பளிச்சிடும் ஒளிப்பிசாசுகள்

பயணம் நெடியதும் கொடியதும்

ஊதல் காற்றும்.

ஜலதாரை வீசும் கடலும்

குளிரும் பயமுமாய்ப் பயணம்.

திடீரெனத் துள்ளிப் படகில் பூத்த

மீனினை என்னிடம் தந்தாய்

நான் கடலிடம் தந்ததன்

உயிர் ஈய்ந்தேன்.

எதிரியானவன் எப்பவும் கூட இருப்பதாய்

வேதத்தில் உள்ளது.

நீயென் எதிரி

நான் பேசிடவில்லை.

நீ காட்டிக் கொடுப்பனவாய் இருக்கலாம்!

நீயும் அறிவாய்

நானும்

காட்டிக் கொடுப்பனவாய் இருக்கலாம்!

வேதத்தில் கற்பிக்கப்பட்டதை

செய்பவன் ஆனேன்

நீ மட்டுமென்ன?

ஜலம் வீசி ஆடும் கடல்

கொடுங்குளிர்

இது மழைக்கால கும்மிருட்டு

கொல்லும் கூதல்.

எங்கேயந்த ஒளிப் பொட்டுக்கள்?

எங்கேயந்தத் துருவ நட்சத்திரம்?

எங்கேயந்தக் குருசு?

அவலத்தொனி

அடி வயிற்றில் ஊர்ந்தது

ஊழி மழையில் ஓட்டிகள் குரல்

திசை தெரியா அவலம்

வானமே வழிவிடு

இல்லை

வானம் வழி விடவில்லை

ஒரு பாட்டம் பாடியது.

பாவியானவர் எம்மிடையுள்ளதாய்

ஓட்டிகள் உரைத்தனர்

யாரந்தப் பாவி?

யாரந்தத் துரோகி?

அவனைக் கடலில் தள்ளுக!

திருவுளச் சீட்டினைப் போடுக

எவனோ அவனே பாவி

எவனோ அவனே துரோகி.

மழை கொடியது.

குளிர் கொடியது

மனிதர் கொடியவர்.

பேய் பிசாசாய் அலைபவர்

மனிதர் பசித்தவர்

மிகமிகப் பசித்தவர்

எனைக்கடலிடம் தந்தனர்

நான் அலைகளில் வீழ்ந்தேன்.







பகுதி - ஆ : மாநகர்




ஆர்வத்துடன் நெருங்குகிறேன்.

போவதற்கு முன்

எனைத் தந்து விட்டுப்போகிற அவஸ்தை

போய்க்கடந்த தேசமொன்றின்

பெரும் பாவச்சுமைகள்

இளமை தசைக்கணுக்களில்

துவண்டு போன தோல்விகள்

பரணில் தூங்கிவிட்ட

கிளர்ச்சியூட்டிய எண்ணங்கள்....



பேர் பெற்ற வழிகாட்டியின்

முட்டாள் சீடனே!



தப்புகிற வேகத்தில்

விட்டோடிப் போன நிலத்தில்


படரும் செடிகளாலொரு

கிரீடம் செய்!

பொறுப்பற்றவனும் செலவாளியும்

அமைதியற்றவனுமாகி

போதையில் கரைந்த நாடோடியே!

தென்னந் தோப்பும் சவுக்கம் காடும்

மணற்பரப்பும் பரந்த கடலுமாய்

நீ பெற்ற இரவுகளை

எதனிடத்து காவு கொடுத்தாய்?


வேர்கள் படர

நீ யாசித்த நிலத்தில்

எதைத்தான் பயிரிட்டாய்?


வனவாசத்தில் ஒதுங்கிய மரக்குடில்களும்

சிற்சில மனிதர்களும் போலல்ல நரகம்

மாளிகையும் மயக்கமுமாய் நினைவுகள்.

தூற்றப்பட்ட மனிதர்க்கு

புனர்ஜென்மம் கொடுத்த வரிகளை

வாசித்துக் கொண்டிருந்தேன்.

அதல பாதாளத்தின் குரூர அழகு

இது எத்தனையாவது பயணம்?

இது எத்தனையாவது குகை?

இது எத்தனையாவது குரல்?

சந்தித்த எத்தனையாவது

மனிதன் நீ?

தற்கொலையும் நீராசையும் நிறைந்த

புதிர்க்கணக்கினை நீயுரைத்த பின்

இரவுகளைக் கடக்க

யாரும் துணைவரவில்லை.

எதுவரை உண்மையினை அவர்கள்

கொண்டு சென்றார்கள்

அதுவரை நான் வந்தேன்.

எங்கு வைத்து கொலை செய்தார்கள்

நான் அங்கிருந்தேன்.

என்னால் முடியாத பேரழிவினை

ஊழியில் இயற்ற

எனையங்கு தயார்படுத்தினார்கள்.

நீண்ட தொலைவிற்கப்பால்

அந்நியமான மலையின் அந்தரில்

பாதாளம் வரை பரவிய பிரானே!

ஆவி பதற அலையெறியும் கடலே

கணக்குகள்

மீளவும் தீர்க்கப்படுகையில்

நான் அஞ்சுகிறேன்.

வரண்டு போன சொற்களுடன்

ஒரு கவிதை முடிந்து விடக்கூடும்

என்பதே!

பாழாய்ப்போன பிரிவின் வேகத்தில்

கிராமத்து ரயில் தடங்களில்

வேகத்தோடு பாயும் நதி.

நெடிய பயணங்களின் முடிவில்

சந்தித்த பிரியம் மிக்க

பெண்களின் நெருக்கத்தில் தத்தளித்து

வாழ்த்துச் செய்தியுடன்

விடைகொண்டு.....

போய் வருகிறேன்.

ஜனசந்தடி மிக்க தெருக்களில்

ஓடுகின்ற ஊர்திகளில்

தெறிக்கும் கணங்கள்.....

பேச வேண்டா

சிரிக்கவும் வேண்டாம்!

பனிபோல் கண்களில் படரும்

மெல்லிய திரையில்

சேதிகளைப் பகிர்ந்து கொள்வோம்

போய் வருக!




பகுதி இ : காட்டாறு



இடி மின்னல் மழை காற்று

கடலடி புயலுடன்

எழுந்தது மாரி!

நீர் கோளமாய்ப் பாயும் வெள்ளம்

ஊழி முடிவு போல்.

அச்சந் தரும் கொடூர மழை!

ஆத்மாவில் திருப்தி

சொந்த நிலத்தில்

பாதம் பதிகையில் கிளர்ச்சி!

கடலும் காடும்

வெள்ளமும் குளமுமாய்

சட்டென விரியும் கிராமம்

வயலும் தென்னையும்

மீனும் நெல்லும் நிறைந்த பூமி.

நீங்கள் எங்கு சென்றீர்கள்?

யாரைப் பேட்டி கண்டீர்கள்?

எதை அறிந்து கொண்டீர்கள்?

ஆயுத பேரங்களின் பின்

இரவில்

வங்களா விரிகுடா தாண்டும்

ஆயுதங்களின் கணக்கினை விடுவோம்.

வனத்திடை பயிற்சியை

நோய் கருதி முறித்துத் திரும்பிய

முதியவரையும் விடுவோம்.

நியாயங் கூற ஏலா கண்ணீருடன்

விரட்டப்பட்ட மக்களிடையே

விடுபட்டு உதிரியாய்

ஒன்றிப்போன ரசூலின் கதையினையும்

விடுவோம்.

மெல்லவும் ஏலாமல் விழுங்கவும் ஏலாமல்

எல்லைக்கப்பாலும் இப்பாலும்

யாரும் உரிமை கோரப் பிரதேசத்தில்

நெஞ்சை நிமிர்த்திப்போம் ஜீவியே!

எங்கு முளைத்தெழுந்தேனோ

அங்கு

ஒரு துண்டு நிலத்தில் படருமென்

வேரினை இழக்க எனக்குச் சம்மதமில்லை!

பெருக்கெடுத்தோடும் வெள்ளம்

வேரினை அரித்துப்போகும்

காட்டாறு

மிஞ்சிய வேகத்தில்

எதனையும் விட்டு வைக்கவில்லை

உயிரும் பொருளும்

கல்வியும் செல்வமும்

நூற்றாண்டுகால வரலாறும்

அச்சமும் நாணமும்

குலமும் கோத்திரமும்

ஜாதியும் பேதமும்

சுழித்தோடும் ஆற்றோடு

தேசவழமைச் சட்டங்களும்

உரிமைகளும் விதிகளும்

விழாக்களும் விழுமியங்களும்

பாவமும் பாவத்தின் கூலியும்

அனைத்தும் நதியின் வேகத்தில்

ஆற்றுப்படுக்கையில்

ஆற்றோரச் சிறுகல்லும்

பளிங்காய் ஒளிர்கையில்

குருடாய் முடமாய்

ஏராளம் ஜீவிகள் ஓய்கையில்

இனம் புரியா இசை

கண்தெரியா இசைஞனின் பாடல்

அலைகளில் எழுகின்ற முகம்

ஓவென்றிரைச்சலிடும் கடல்.

தந்தையும் தாயும் வாழ்ந்தலுத்த

நிலத்தில்

ஓலைக்குடிலில் தனியிரவு

இரவு விரிந்தது.

பொழுதுகள் போய்ப்படுக்கும்

பின்னிரவில்

நம்பிக்கையுடன் பிரியமான

முகங்களை எழுதத் தொடங்கினேன்.




பகுதி - ஈ : அழைப்பு

இனத்தில் பெரிய ஜாதிகள் நாங்கள்

பிழைக்க வழியில்லாமலே

எவர்க்கும் பெருமை கொடுக்கும் செந்நெல்

விளையும் தறையை அணுகினோம்.

சேர்ந்தபடியே நம்முடனே

சூழ்ந்த பண்பினர் யாவருக்கும்

சுறுக்கு விளையும் தறைக்கு வந்தோம்.

துறக்க வேண்டாம் மானிடரே!

துறக்க வேண்டாம் மானிடரே!


13.02.1995

சரிநிகர் இதழ் 75- யூன் 291995

குறிப்பு:

1.  'யார்க்கெடுத்துரைப்பேன்?' என்ற குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகத்தில் வருகிற நாடோடிப்பாடல் சிறுமாற்றங்களுடன் பகுதி - ஈ அழைப்பு ஆக வருகிறது.

2. இலங்கையரசு - புலிகள் பேச்சுவார்த்தை முறிந்து இரண்டாம் ஈழப்போர் 1990-ல் தொடங்கியவுடன் இலங்கையரசு யாழ்ப்பாண குடாநாட்டுக்கான பொருளாதார தடையை விதித்து யாழ்;ப்பாணத்திற்கான தரைப்பாதையையும் ஆனையிறவில் துண்டித்ததன் மூலம் குடாநாட்டிற்கான உலகத் தொடர்பினை அறவே துண்டித்தது. போராட்டத்தினால் முழு வளங்களும் உள்வாங்கப்படும் என்ற அறிவிப்புடன் புலிகளினால் யாழ்குடாநாடு ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டது. இக்கடற்பாதையில் பயணிப்பது சட்டவிரோதம் என அறிவித்த இலங்கையரசு பயணம் செய்த மக்களை தனது கடற்படையினால் சுட்டும், வெட்டியும், குண்டு வீசியும், ஷெல் அடித்தும் பல முறை படுகொலை செய்தும் கைது செய்து துன்புறுத்தியபோதும் வேறு வழியின்றி இப்பாதை வழியே பயணம் தொடர்ந்தது. சிற்றூரவை, வட்டவை, தமிழீழகாவல்துறை, தமிழீழநிர்வாக சேவை, தமிழீழநீதிமன்றுகள் என விரிவடைந்த ஆட்சி இயந்திரத்தில் புலனாய்வுத்துறையும், பகிரங்கப்பட்ட பகிரங்கப்படாத சிறைகளும் முக்கிய பங்கெடுத்த

கருத்துகள் இல்லை: