20120321

நட்சத்திரங்கள்


கண்களின் சலனத்தில்

திரண்ட துளியில்

எத்தனை கனவுகள் ஏறிநின்று

ஓலமிட்டன

எல்லாம் எங்கு மறைந்தன



தொப்பூள் கொடியறுத்து

நீண்டகாலம் போனபின்

நூலிலையாய் கண்ணறியா

இணைப்பின் ஈர்ப்பு மீளவும்

மெல்லிதாக என்கரங்கள்

அதிர்கின்றன.



கருப்பை அதிர்ந்ததொரு தழுவல்

காற்றில் அலைய அனுமதிகோரும்

மகரந்த மணியின் பிரிவு!



2.

நான் கேள்விகளை இயற்றுகிறேன்@

தோலின் நிறத்தையும் சதையையும்

தாண்டி நீ  எப்படி ஆக்கப்பட்டுள்ளாய்

என் பெண்ணே

இயல்பாக நீ அதிர்கையில்

நாம் எதைப்பற்றிக் கதைக்கலாம்?



உன்னைச் சிறுகுழந்தையாகக்

கருதிக் கொள்கிறேன்@

உன்னுலகம் சிறியதென்று

சொல்லிக் கொள்கிறேன்.



வானம் மரணம் தூவி

காத்திருக்கையில்

வல்லை வெளிகளில்

தினமும் பயணிக்கிறோம்.



நிதானமான ஒவ்வோர் உதையையும்

காற்று எதிர்க்கிறது.

காற்று அதிர்ந்து இரைச்சலிட்டு

கூவுகிறது.



ஆனாலும்

ஏனிந்த மனிதர்கள்

நினைவுகளைக் கொச்சைப்படுத்தி

தோல் சுருக்கங்களுடன்

உறைந்து போகின்றார்கள்



3.

எப்படியெல்லாம் மனிதர்கள்

பிணைக்கப்படுகின்றார்கள்?



முகங்கள் எப்படி கணங்களில்

மாறிப் போகின்றன



எத்தனை காவியங்கள்

சோரம் போகின்றன

கருவழிப்புகள் மனதை உறுத்துகின்றன

ஆண்டின் முடிவில் நின்று

எத்தனை இதயங்கள் ஏங்குகின்றன



நல்ல மனிதர்கள்

எப்படியெல்லாம் ஒடுங்கிப் போகிறார்கள்



நீ அறிவாயா

மெல்லிய வருடலுக்காய் எத்தனை

இதயங்கள் ஏங்குகின்றன



4.

இவற்றைத் தாண்டியா

இத்தனை குரூரங்கள் போயின வென்று

கல்லூரி வாசல்களில் நின்று

அதிசயப்படுகிறேன்.



மனிதர்கள் சலித்துப் போகின்றனர்!

பாழாய்ப் போன பிரிவுகள்

எப்படி வருத்துகின்றன!



ஆனாலும்

குழந்தைகள் சந்தோஷித்துக் கொள்கிறார்கள்

காயங்கள் ஆறுகின்றன!



5.

கைக்குள் அடங்க மறுத்து

கனவுகள் என்னைத் தின்றன.

கனவுகளை வழங்கி விட்டு

காத்திருந்த இரவுகளில்

நடந்ததை நீ அறிதல் கூடும்.

நரகங்கள் கூவியழைத்து

நடமாடச் செய்தன.



தனித்துப் போன ஒற்றையடிப் பாதையில்

காற்றியாற்றிய மணற்படங்களை

குழப்பியபடி சென்றேன்.



வாழைமரங்கள் குலையைத் தள்ளின.

வெண்ணிரவுகள் வந்து போயின.

என்ன நடந்தது

விருட்சிகம் வானில் நின்றது@

கொடுக்குகளைத் தயாராக்கி!



6

தோல்விகளைக் கொண்டாடி

அந்நியமாய் எனக்குள் பிளவுண்டு

தீவாய் ஒடுங்கி

ஒதுங்கிய ஜீவனற்ற தேசத்தில்

மலட்டுக் காலங்கள்.



எதைத்தான் ஈனும்

அர்ததமற்ற இரவுகளில்

நட்சத்திரங்கள் இருந்ததை

யார் கண்டார்கள்?

இயல்பில் தோயும் உணர்வுகளை

களங்கப்படுத்தி

பாவங்கள் என்றுரைத்த

மலட்டுக் கருத்துக்கள்

எதைத்தான் செய்யும்

சேற்றினைக் கண்டு அருவருந்து

மனிதர்கள் சலித்து

தனித்து ஒதுங்கி



உணர்வுகளைக் சிதைத்து

வளைவுகளில் இயங்கப் பிடிக்காமல்

முரண்டு பிடித்த நோக்கிய போது

கண்ணீர்த்துளிகளின் வளைவுகளேன்

மறந்து போயிற்று



7.

மனிதர்கள் தமக்காய்

மட்டுமே அதிரப் பழகிக் கொள்கிறார்கள்.



எதிரிகள் தான்

இணைந்து கொள்கிறார்கள்.



அட

கிராமங்களேன்

சிதைந்து போகி;ன்றன?



8.

மனிதர்களைப் பெறுவதற்காக

ஒளியில் விலகி இருளில் நடந்தேன்

மெல்லிய கீதங்களை இசைத்தவாறே

இரைச்சலில் கரைந்தேன்.

இருளால் மட்டுமே

இயற்றப்பட்ட மனிதரிடையே

என்னைத்; தொலைத்தேன்@

மனிதர்களைப் பெறுவதற்காக!



9.

எனக்குப் பிடித்தமான

பாவங்களைச் செய்து கொள்கிறேன்.

சேற்றில் புதைந்து

புரியாதவனாய் இருந்து கொள்கிறேன்.



தூய மனிதர்களைச் சந்திக்க

நான் பிரியப்படவில்லை.

அந்த நம்பிக்கையும் எனக்கில்லை!



தூயவனாய் இருக்கவும்

நான் பிரியப்படவில்லை.

பூமியில் எனக்குரிய இடம்

அவமதிக்கப்படுவதை

நான் அனுமதிக்க முடியாது.



மனிதர்கள் வேர்களை அறுத்து

விலகிப் போகையில்

என் வேர்கள் ஆழப்பாயும்!



அந்தப் பறவைகள் நாடிவரும் போது

உலாப்போக என் சிறகுகள் முளைக்கும்!



பறந்து போகையில் பதிவுகளை விட்டுச் செல்ல

நான் ஆசைப்படுகிறேன்!

நீ

ஆழமான பார்வையினைத்

தருவாயானால் எவ்வளவு அற்புதமாயிருக்கும்



என் கண்கள் பனிக்க

நன்றி சொல்வேன்!



10.

மேகங்கள் விரைந்தோடுகையில்

தலைமறைக்கும் நட்சத்திரங்கள்

நம்பிக்கையுடன்

எனக்காக இருக்கின்றன!



31.10.1991


கருத்துகள் இல்லை: