20120320

ஏவாள்

ஆதியில் வானில் நட்சத்திரங்களும்
பால் நிலவும் எழுந்தன!

நிலவை அடைய முடியாததென்ற
குரல் ஒலித்த வண்ணமிருந்தது.

பால் நிலவில் மனங்கிளர்ந்ததை
எவரும் மறுக்கவில்லை.

நிலாவைப் பற்றிய நம்ப முடியாத ஏராளம்
செவி வழிக்கதைகளை நீங்கள் அறிவீர்கள்.
நினைவுகள் நிரப்பப்படாத போது
ஏதேன் தோட்டத்தில் கனிகளைப் புசித்து
வேட்டையாடி அலைந்தேன்!

ஜீவ ஜந்துகளிற்கு
அவற்றின் இயல்பின் படிக்குப் பெயரிட்டேன்.
உலகம் உருண்டையானதென்று நூல்கள் கூறுகின்றன
நான் பார்த்த பொழுது
எதுவுமற்றும் ஜீவனற்றும் இருந்தது.

அங்கு உறவுகளை வரையறுக்க வேண்டியிருந்தது
வாழ்வை நிர்ணயிக்க வேண்டியிருந்தது!

அந்தப் பொழுதுகள் மறக்க முடியாதன
நான் தனித்தலைந்தேன்.

இன்னமும்
மனிதமுகங்களை கண்டுபிடிக்கப்படாததை நீங்கள் அறிவீர்கள்
என் கண்கள் சிரிக்காதிருந்ததை
யார் கண்டிருக்கக்கூடும்?

கர்த்தர்
என்விலா எலும்பினை ஓடித்தார்!
என் நெஞ்சிலிருந்து ஏவாள் புறப்பட்டாள்!

உணர்வுகளையும் உள்ளத்தையும்
நாங்களே சிருஷ்டித்தோம்!
ஏவாள் என் இதயத்தை நிறைத்தாள்!
நான் மனிதனானேன்!

04.03.1991

வெளியீடு: சரிநிகர் இதழ் 58 ( 27 ஓக்டோபர் 1994)

கருத்துகள் இல்லை: