20120321

சூரியகந்த


பேரதிர்வுகளில் உயிரிழந்து

சிதைவுகளை நெஞ்சிற் சுமந்து

வரிகளைத் தாங்க ஏலாது

முறிந்த வாழ்வுடன்

இடம் பெயர்ந்துழலும் அவலம்.



வாவிகளில் பிணமாய்க் கரைந்து போகையில்

திறந்த வெளியரங்குகளில் மலரேந்தித் துதித்தவர்

புதைகுழிகளில் ஓய்ந்திருந்ததைத்

துயில் எழுப்பி ஊர்திகளில்

வேட்டைக்கு அனுப்பியவர் நீவிர்

பழையதை, பயந்ததை வேதனையை

வடுக்களை துயரங்களை மறந்தீர்!



தீப்பிடித்த நகர் மீதில் படரும்

அரியப்பட்ட மனிதரின் அவச்சா

இரவுகளைப்

பின்னேர கடலலைகளை

நிலவை இழந்தாயிற்று!


இப்படியாய்

எத்தனை பயணங்களை இழந்தாயிற்று!

மனங்கொண்ட நினைவுகளை அழிந்து போயின!


இவற்றை மன்னிக்க

குரூரத்தை மறக்க இயலவில்லை!

போய்ப் பார்

போர் இளமையை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது!


30.11.1995

குறிப்பு :

               UNP ஆட்சி நடத்தியபோது சூரியகந்த போன்ற சிங்களப்பிரதேசங்களில் மக்களை கடத்தி பெருங்கிடங்குகளில் உயிருடனும் சடலமாயும் புதைத்தது. சந்திரி;க்காவின் பொதுசனஐக்கிய முன்னணி (PA) 1994 இல் ஆட்சிபீடமேறியதும் பெரும்பிரச்சாரத்துடன் அப்புதைகுழிகளை கிண்டியது.அதே சந்திரிக்காவின் அரசு, தமிழர்களை கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் வெள்ளைவான்களில் கடத்தி வதைத்துக்கொன்று பொல்கொட வாவியில் எறிந்தது. யாழ்ப்பாணத்தில் செம்மணியில் 500க்கு மேற்பட்ட மக்களை கடத்திச் சென்று கொன்று புதைத்தது. 


கருத்துகள் இல்லை: