20120321

இரவுகள்



நேரங்களுக்கு தமையிழந்த

மனிதர்கள் ஓய்கையில்

என்னிரவுகள் அதிரத் தொடங்கும்!



நாய்களின் குரலழிந்து

மாரித் தவளைகள் ஓங்கும்

கணங்களிலென்

மாரிகால இரவுகள் ஆரம்பமாகும்!



பகல்களுக்கீந்தெனை

மீளவும் மீட்கும் இரவுகளில்

கடலின் விளிம்பில்

நடந்ததை மீட்டுவேன்!



கரைகளில் ஆடிடும் அலைகள்

விசிறிடும் திவலையில் நிறங்கள் பதிந்தன.
 

நிறங்கள் பதிகையில் தேகம் கிளர்ந்தது.

கடலின் விளிம்பில் அவாவிச் செல்லும்

ஓடங்கள் அலைந்தன!



பரலோகம் போய் குபேரருடன் கைகுலுக்கி

பல்லிளித்து பாவங்கள் செய்தபின்

சக்கரமேந்திய பாவனையில்

கிருஷ்ண பகவான்கள்

சொல்லிய கதைகளில்

சொற்கள் மட்டுமே மிஞ்சிப் போனது



வெண்முகில்கள் பால்வெளிகள் தாண்டி சொர்க்கமாம்

வச்சிராயூதம் விற்க இந்திரர் வருவரென்று

வழிபார்த்திருந்த பகவான்கள்

செய்த பரிசோதனை விளையாட்டில்

மழலைகள் குரல்களில் கீறல் விழுந்தன!


வியர்த்துக் கொட்டும் கடுங்கோடை இரவுகள்

நினைவில் எழுந்தன.



வியர்த்து நுளம்புகள் பிராண்டி எரிச்சலுற்று

துடிக்கும் நட்சத்திரங்களை பார்க்கப் பிடிக்காமல்

அறைக்குள் முடங்கி மரங்கள் மூச்சுவிடும்

ஒலிகளை கேட்கப் பிடிக்காமல்

செவிகளைப் பொத்திய கடுங்கோடை இரவுகள்

நினைவில் எழுந்தன.



மூச்சிழுத்து மழை பொழியும் இரவுகள் ஆழமானவை!

 வெள்ளம் போடும் இரவுகளில் கனவுகள் கண்டேன்.


விலா எலும்பு வரிகளுடன் எலும்புபோல் ஏதோவென்று

உதடுகள் அசைத்து அலைந்தது போல்.
 

வேற்றுக் கிரகவாசிகள் தந்துதவிய லீலைகள்

பட்டுத் தெறித்தது போல்

காயம் பட்ட மண்ணின் அகோர தாகத்தால்

கண்கள் சொரிந்து வற்றிப்போனது போல்.


இரத்தமாய் நிணமாய் கரைத்த கருவின் முகம்

என்னை நெருங்கையில் திடீரென விழிப்பு!


யேசுவினருகே அறையப்பட்ட கள்வரின் முகங்களைக்

கனவில் கண்டது எப்படிச் சாத்தியம்?

 பதில்லாமலே இரவு சுழன்றது .

வெண்ணிரவுகள் தந்த சுமைகள்

தொடர புலராப் பொழுதில் பயணம் போனேன்!


கிராமத்தின் ஆத்மா என்னுள் நிறைகையில்

நான் அழிந்தேன்!



22.12.1990

கருத்துகள் இல்லை: