20120321

பாழ்வெளி



யார் எங்கு போனார்கள் எதற்கு
எதுவுமே புரியவில்லை

என்றென்றுக்கும் அகதியாய்
ஒரு மூலையில் ஒதுங்கி

எதையிழந்தேன்
எதைப் பெறத்தோற்றேன்

வெற்றுக்கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்

எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது.

வேண்டாம்
அவலந்தரும் பிரிகள் வேண்டாம்

பாழ்பட்ட பிரிவினைப் பழிப்பேன் நான்.
வலம் வந்த இரக்கமற்ற நினைவுகளைப் பழிப்பேன் நான்.

தூக்கமற்று புரள்வதற்காய் இரவுகள் வருகின்றன
பித்துப்பிடித்தலைவதற்காய் பகல்கள் காத்திருக்கின்றன.

விதியைப்பற்றி எச்சலனமும்  இன்றில்லை
வேகமாய் அதிர்ந்ததிர்ந்து ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை

இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில் பறவைகளைப் பார்த்து ஏங்கி குறுகுறுத்து ஓயவேண்டும்

19.04.1991

 வெளியீடு: மூன்றாவது மனிதன் இதழ் 8, 2000,பக்கம் 30

கருத்துகள் இல்லை: