20120321

கர்மம்


துயரங்கவிந்த நிலத்தில்
போர்விரும்பித் திரண்ட அணிகள் நடுவே
பிரானே
நீ விரித்துரைத்த பிறப்பின் ரகசியத்தின் முன்
தந்தையரும் தனையரும் துரும்பாய்ப் போயினர்.


பிரம்மத்தின் பின்னின்று அம்பெய்து கொன்றவன் நீயென
நீட்டிய கையை உதறி இம்சித்து
களவெடுத்து கூச்சமின்றி முகம் கொண்டவவென
காவியங்கள் உனைத் தூசிக்கின்றன!

நீயுரைத்த பொய் என்னுள் இருந்தது.
உன்பாடல் என்னுள் வளர்ந்தது.

நீயோ நான் சந்திக்க விரும்பாதவரையெல்லாம்
அணியணியாய் என்னிடம் அனுப்பி வைத்தாய்
கொல்லப்படுவதற்காய்!

கர்மத்துறவிலும் கர்மமே சிறந்ததென நீயுரைத்த வண்ணம்
கர்மமேயாகித் தேசாந்திரம் போய் காதலுற்றேன்.
தவமியற்றி தத்துவம் பயின்றேன்.
உலகோர் வியக்க அஸ்திரம் கொணர்ந்தேன்.

அன்பு காதல் பிரம்மம் நீயென
சாமகானம் எழுந்தது.

போர் விரும்பி கூடிய நிலத்தில்
நீ நிர்ணயித்தபடி நன்னாளில்
முன்வந்து தன்னாவி தந்த மகவின் முகமேன்
ஆன்மாவைச் சுடுகிறது.
என் நெஞ்சேன் துயருற்றது?

பதினெட்டு நாட்களுக்கப்பால் செய்தி இருந்தது.
எவரையும் கவரும் செய்தியாயது மாறவேண்டியிருந்தது.

14.02.1998


வெளியீடு:இன்னுமொரு காலடி, 1998( பக்கம் 190)

கருத்துகள் இல்லை: