20120321

வம்சம்


அனல் வாதமும் புனல் வாதமும்

முடித்த கையுடன்

அது போகிறது.

அடியோடழிகிறது வம்சம்.



மாரிக் காலத்தின் நீண்ட பயணம் முடித்து

நோயுடன் திரும்பிய புதல்வர்

வாய்க்காலில் இறங்கி குளிக்கப் போய்விட்டனர்.



காலாறி வருவதற்கிடையில்

எவரோ இசைக்கும் மூன்றாந்தரப் பாடல்

ரயில் வண்டியின் கரிப்புகையாய் சூழ்கிறது.



சாண்டில்யத்தனமான கதைகளைத் தின்று

தினவெடுத்த குதிரை

உற்சாகமாய் கனைக்கிறது.



குறுகிய இடத்தில் அடங்க நிர்ப்பந்திக்கும் இரைச்சலில்

இளமை சிறையிடப்பட்டதும்

சிதறப்பட்டதும் அறியா மட்டிக்குதிரை

வெள்ளங்கண்டு கனைக்கிறது.



பெண்ணின் மோகத்தில் நிலைகுலைந்து

தவமழிந்து

தண்டுடன் வீதிக்கு

குதிரையில் ஏறினான் முனிவன்.



அவனது கமண்டலத்தில்

குருதியூம் குரூரமும்

எனதில் வன்மம்!

கவிழ்த்த கமண்டல வெள்ளத்தில்

ஆவிதளர்ந்து

தந்தையும் தோற்றான்

தாயும் தோற்றாள்

தனையனும் ஓடிமறைந்தான்.

தெருக்களில் நாட்பட்டகாயம்போல்

தெரிந்த முகங்கள்.



நிலத்துடனான சம்பந்தம் முடிவுக்கு வந்ததுபோல்

பாய்ந்து செல்லும் காற்றலைகளில்

முனம்கொள்ளா வேகத்தி;ல்

தளர்ந்தும் இறுகியும் நெகிழ்ந்தும்

யுகம்யுகமாய் எவருமற்றிருப்பது போல்

காலம்வந்து சேர்ந்தது.




கருக்கலைத்தோடும் மேகத்தின் இடியோசை

நிலத்தில் போட்டதை எடுக்காமல்

போகச்சொல்லுகிற இடத்திற்குப் போய்க்கொண்டு

பதியச்சொன்னால் பதிந்து

நிமிர்ந்து

இந்தத் தலைமுறையல்ல

ஏழேழ் தலைமுறையும் பேசப்படுவதாய்

சீமான்களின் பெயரில் ஒருபெருக்கு.

சீமாட்டிகளின் பெயரில் ஒருபெருக்கு.



போய்விடு எங்காவது

மௌனித்தகோட்டையை சுழித்தோடும் ஏரியில்

ஆனமட்டும் ஆடி

நனைந்து குளிர்ந்து போய்விழு!



ராஜாதிராஜ ராஜேந்திரசோழ கனவுகளுடன்

ஆயிரமாண்டு கால தூசையூம் அழுக்கையும்

சேர்த்திருந்த கிளாளிக்கப்பால்

கற்கிழுவையூம் பூவரசும்

பனையும் வடலியுமாய் பரந்த நிலத்தில்

புயல் ஓய்ந்த மறுநாள்

செய்திகளுக்கா பஞ்சம்?




நெடுந்தொலைவில் இயங்கும் உலகுகள் பற்றி

அறிந்தே இராத என்னம்மை

மழை கொடிதா குளிர் கொடிதா

கூர் இரவின் குளிரில்

நீவளர்த்த வடலியை

புயல்மழை பிடுங்கிச் சிதைத்தாய்

நீயறிய முன்னரே

நின்னாவி போனதென்ன நியாயம்!



மலர்ந்ததை வழியனுப்பி

மொட்டுகளைச் சிறகுகளால் பொத்தி

பிச்சியாய்

நீ திரிந்த ஒழுங்கைகளில்

ஓயா வெள்ளப்பெருக்கு!



பேரன்பேத்திகளுடன் உடலோடு உடலாக

குரல் கேட்டு கதைகேட்டு

சாய்ந்தாடித் தவழ்ந்து

வாழ்ந்து பெருகி......

எதையெல்லாம் நீ இழந்தாய்.



களைத்த நிலத்தில் பயிர் வளர்த்தவளே

போ

நீ வளர்த்த பூவரசு

சிதைவிரித்து காத்திருக்கு

மழையை வாழ்த்திப்போ!




பருவங்களில் உரத்துப்பெய்யூம்

மழைநாட்கள் மீதெனக்கு உக்கிரவெறி.

வரண்ட நிலத்தில் புரண்டவன்

எப்படி நேசியாதிருக்கவியலும்?



சூல்கொள்ளா மேகங்களுடன்

சல்லாபிக்க என்னால் முடியாது

கருக்கொண்டு மண்ணைக்கவ்வும்

பெருங்கோளப் போர்வையை உதறிவிட்டு

அனல் இரவில் அடங்கிப் போக சம்மதமில்லை.



கண்களை மூடி கண்ணீரால் பெயரெழுதியெனை

அணைத்தாறிய நிலமே

உனக்குப் புரிகிறதா

மழைதருவது புயல் எனினும் மழையல்லவா!



கார்த்திகை 96





சரிநிகர் இதழ் 112 (19 டிசம்பர் 1996)

கருத்துகள் இல்லை: