20201028

யாத்தலும் நெய்தலும்

 

பாய்ந்து செல்லும் அலைகளில் சலனம்

கடலின் அணைப்பில்

சிறுநண்டின் கவினுலகம்

'விழிகள் மலர்கல்ல கொடிய கொடிய

கண்கள் கயல்களல்ல கூற்றம் கூற்றம்'

'யானும் நீயும் எவ்வழி அறிதும்'

 

அலைகள் மணற்பரப்பில் கொஞ்சி விளையாட

உதித்த அதிகாலையில்

நான் அளைந்த மண்ணில் வெகுதொலைவில்

அவள் தந்த அனைத்துக்கும் சாட்சியாய்

நான் மலர்ந்தேன்

 

எங்கள் அதிர்வுகள் லயத்துடன் எழுந்தன.

மலர்ந்திருந்த மாலையில் உணர்ந்து கொண்டோம்

வாழ்வு மகிழ்ச்சியானதும் தான்

கோபித்துக் கொண்டு கோடை போனதும்

அழகொளிர வந்தது வேனில்

வானம் வீசும் பெருந்துளிகளில் நனைகிறது காதல்.

அனலடித்த நாட்கள் விலகிப்போகட்டும்

குளிர் உறைக்கும் கொடுநாட்களும் கடந்து செல்லட்டும்

இளங்காலையில் வசந்தமெனைத் தட்டியெழுப்பட்டும்.


11.10.1991


தளங்களும் முகங்களும்

 

கையெட்டும் தொலைவில்

ஊர்களும் பயின்ற முகங்களும்;

போயிருந்திருக்கலாம்

யாரும் காணாமல் களவாகவாவது

 

பொழுதுசாய்கையில்

எழுகின்ற முகங்கள்

காற்றோடும் மண்ணோடும்

கடலோடும் கரையோடும்

கரைந்த முகங்கள்

உர்ரென்ற முகங்கள்

களையிழந்த ஏராளமேராளம் முகங்கள்

உயிரோம்பும் முகங்கள்

 

கண்ணெட்டும் தூரத்தில்

மெய்நிகர்த் தளங்களும்

மெய்நிகர் முகங்களும்

வியர்ப்பதுமில்லை

யாரும் விதைப்பதுமில்லை

அறுப்பதுமில்லை.


04.01.2017