20120321

காலக்கணிதர்


எண்களைப் பற்றி

உணர்வுபூர்வமான அனுபவத்தை கொண்டிருந்தாய் நம்பியிருந்தேன்.

பிரமிப்பூட்டிய எண்களோ பலுகிப்பெருகின.



தேசிய நெடுஞ்சாலையும் காவல்துறையும் அச்சமூட்டின.

பாதாளலோகத்தினர்

நீதியைப் பெற்றுத் தருபவர்களாய் மாறி

எண்களைச் சேரிகளுக்கு ஓட்டிச்சென்றனர்.



எண்களோ தமக்குள் கூடியும் பிரிந்தும் பெருகின.

மோதல்கள் நிகழ்ந்தும்

சேரிகளுக்குள் பாய்ந்த வெள்ளம்

எண்களை அள்ளிச் சென்றது.

எண்களோ மிதந்துபோய்

வாய்த்த திட்டிகளில் தங்கிக் கொண்டு புதிர்கள் போட்டன.



நண்பர்களோ

எண்களைப் பற்றிய தீவிரமான கருத்தினைத்

திறந்த விவாதத்துக்கு வைத்தனர்.

எண்களின் நினைவுகள் வெறுத்துப்போயின

அவை பேரில் கோபம் வருவதில்லை

கோபித்தென்ன பயனென்று

நோயுற்றபோதும் தேசிய வைத்தியசாலையில்

அவமானப்பட விரும்பவில்லை!

அது பொதுத்தேர்தலுக்குரிய காலமாயிருந்தது.

என் ஜனநாயகக் கடமையினைப் புறக்கணித்தேன்.

சகபாடிகள் தூங்கிக்கொண்டிருந்தனர்.



சலனத்திரையில்

நிலைமைகளைப் பழித்துக்கீதம் முடிந்ததும்

தனித்தலையும் அலியன் ஆனையைப் பீடித்து

இன்னொன்று எழுந்தது.

பின்னர் தன்னுடன் முரண்பாடும் தனியன் பற்றி!

அடுத்தது

திரும்பவே முடியாத பாதையில் வீழ்ந்த

தோழர்களைப் பேரிட்டழைத்து!

ஈற்றில்

குறைகளை நிரப்பும் மரணங்களைப்பற்றி!



10.08.1999

கருத்துகள் இல்லை: