20120321

என் வசந்தம் வராமலே போய் விட்டது





இரைச்சலிடும் சனநெரிசலில்

யாரின் குரலைக் கேட்பாய்?

தனித்த நெடும் இரவுகளில்

எந்தக் கனவினைக் காண்பாய்?


பயணங்களும் முடிவுகளுமாய்

நீள்தொலைவில்

மலைகளிலும் அருவிகளிலும்

நினைவுகளை நிரப்பிக் கொண்டு

இந்நேரம்

உன் பிறப்பினை நொந்திருப்பாய்!

என் நினைவுகளையும்

மறக்க முயன்றிருப்பாய்!


நகரத்து போலிகளைக் கண்டபின்

என்நினைவுகள்

அருவருத்துப் போயிருக்கும்!

 எதுவும் நானறியேன்

நெஞ்சில் வேதனை மிகும்

எனினும் உனை வைதிடவில்லை!

 அமைதியை இழந்தென்

நீள் இரவுகளில்

வானத்தில் ஒளிபிடித்து

காதலை அல்ல

வேதனையை எழுதினேன்!

என் நேசிப்பின் உக்கிரம்

உன் ஆத்மா அறியும்!

இன்னுமென் உள்ளத்தில்

நகரத்தின் போலிகள் ஊறவில்லை

உனை இழந்தவன் ஆயினன்

என்ற போதும்

நேசிப்பிற்குரிய என் பெண்ணே

இன்னமும் நான்

நேராக நின்று பேசவே விரும்புகிறேன்!

 என்னை ரணமாக்கிய உன் சொற்களை

நினைவு கூர்வேன்....

 காதலில் கரைந்த நினைவுகளை

ஞாபகம் கொள்வேன்...

எப்படி என்னால் மறத்தல் இயலும்

இனிமையான சோகம்

நெஞ்சில் படர்கிறது!

இன்றென் ஆத்மாவை வருடுவதற்கு

ஒரு செய்தியும் இல்லை.

 வற்றிய என்னிதயம் ஊற்றெடுக்காது

இன்னோர் வசந்தத்திற்காய்

அவற்றின் மலர்களுக்காய்.... ......

மீட்டெடுத்த என் கனவுகள்

மாண்டு போயின!

 என் வசந்தம்

வராமலே போய் விட்டது!



13.04.1990


கருத்துகள் இல்லை: