20120321

விசாரணை

விசாரணையதிகாரியின் கபடம் நிறைந்த கண்கள்
உண்மையை வாங்கி வாழ்வைப் பதராக்கும்
பார்வையைத் தாண்டி
உண்மையை ஒளித்து ஒளித்து களைத்துவிட்டது.
திரும்பதிரும்ப எத்தனைதரம் ஒன்றையே சொல்வது

முன்னரே கேள்விப்பட்ட நிலக்கீழ் சிறைகளில்
விடியலும் இல்லை அந்தி சாய்வதும் இல்லை

இது வான்முட்ட எழுந்த கட்டடத்தின் சிறைக்கம்பிகள்
விசாரணையதிகாரியின் முகம் அழகானது
நான் வாழவேண்டும் இளமையைத் துய்க்க வேண்டுமென்று
தன் ஆவலை வெளிப்படுத்தினான்.
அவனது முகம் கருணைமிக்கது செழுமையானது
அவன் நல்லவன் நம்பத்துவங்கினேன்

என் விசாரணையதிகாரி நல்லவனென நான் நம்புவதை
அவனுக்கு உணர்த்த முயன்றேன்.
தலைவர்கள் நல்லவர்களென்று
தப்பிப்பிழைத்த பழங்கதைகள்
நினைவுக்கு வந்தன.

பின்னர் அவன் பார்த்திருக்க பொய்களால்
கோட்டை கட்டினேன். கொத்தளங்கள் அமைத்தேன்.
ஆற்றின் மேலாய்  தென்றலை அழைத்து பூங்காவில் வீசச் செய்தேன்
ஆங்கோர் கல்லாசனத்தல் அவனை அமரச் செய்தேன்

கண்ணமர்ந்த ஒரு கணத்தில் கிடைத்தது கணவிடுதலை
பொய்களையெய்யூம் குரல் நாண்கள்
கணநேரம் நனைத்துக் கொண்டன.
அவ்வளவு தான் அதிகாரி தொடங்கினான்
'உண்மைக்கதை சொல்லு'

நான் சொல்லத்தொடங்கினேன்.
ஆயிரத்தொரு முறையாக
பிறந்த கதையை
வளர்ந்த கதையை
நாமழிந்த கதையை

2002

காலம் இதழ் 23 (கனடா)

கருத்துகள் இல்லை: