20120321

காண்டாவனம்


அ.

புடமிடப்படும் புழுதியில் கிடந்தது

பேரிடப்பட்ட எழுதாக் கவியென பெருநிலம்

காண்டாவனம்

உக்கிர அனலெறிந்து தொடங்கிற்று!



ஆ.

கொதிக்கும் வெயில்

வீசியடிக்கும் செம்மண் புழுதி.

குடம் குடமாய் குடித்தும்

அடங்காவிடாய்

காட்டு மரச்சிற்றிலைகள்

விடும் அனல் மூச்சு!



எண்ணெய் காணாத்தலையும்

தோளில் துண்டுமாய் வலித்த மேனியர்

நிரம்பி வழியும் கள்ளுக்கொட்டில்.

அரசியல் நெடி

தெட்டந் தெட்டமாய்

ஆயனின் ஞாபகம்.



கலைபட்டோடி வருமுன்

கழிந்த காலம்

கொக்கிளாய் கொக்குத்தொடுவாய்

நாயாறெனப் பரந்த அவன் நாடு

பற்றை பறுவுகள் படர்ந்து

காடாய்ப் போனது!



முன்னர்

சீசனிற்கு மீன் பிடிக்க வரும் சிங்களவர்

வாடிகளில் குடித்த வென்னப்புவ வடி

லொறி லொறியா கொழும்பேறும் மீன்

இறைச்சி மாட்டிற்கு வரும் காக்கா





லோங்ஸ் போட்ட பிறத்தியாருக்கு

நல்ல மதிப்பு ராஜபோகம்

நாகு செல்லத்தை வைத்திருந்தான்

தங்கமணி தனபாலை வைத்திருந்தாள்

லிகோரியின் மகளை ராமு வைத்திருந்தான்.



தங்கமணியின் ராஜி நாகுவுக்கு பிறந்தாள்

டயானா யேசுரத்தினத்திற்கு

ரனா எட்வேட்டிற்கு

கோபு ஐயகோனின் மகனிற்கு.

.

புயலடித்து ஓய்ந்ததும்

புத்தகம் வந்தது.



புரட்சி பற்றி கேள்விப்பட்டதும்

வெள்ளையும் கமலனும் பின்னால் திரிந்தனர்.

பெருங்காட்டுக்குளு; வீரர் சென்றனர்.

தளங்கள் இருந்தன

தந்திரம் தெரிந்திருந்தது

தளபதிகள் இருந்தனர்

தம்முள் முரண்பட்டு

பின்னரெலாம்

வெள்ளை வெளியில் போனான்.

கமலனின் காத்திருப்பு

கரைவலையுடன் ஆனது.



2

ஆயன் காண்டாவனத்திற்கு அனலிட்டான்.

பெருமேகத் திரளாய் தீ

விலங்குகள் வெருண்டோட

இருபத்தோரு நாட்கள் காட்டுத் தீ



இரு குட்டிகள் தீய்ந்து செத்தன.

வெகுண்டெழுந்த நாகம்

இருபத்தொரு நாட்களை

நல்லதாகாவெனச் சபித்து

எதிரியிடம் சென்றது.



பெரும் போரை எதிர்பார்த்து

காத்திருந்தது நாகாஸ்திரமாய்.



3.

தமிழோசையோ வெரித்தாஸோ

கேட்டிரா காட்டுக்குடி

பின்னால் கடலோசை

கண்போர்ட் உறுமுஞ் சத்தம்.



குளத்துப் பக்கமாய் நரியின் ஊளை

தூரத்தில் எதிர்க்குரல்

இரவு

ஆயனிற்குத் தெரியும்

ஆட்டுக் குட்டிகளுக்காபத்தென

நோய்களைப் போலிவை பயங்கரமில்லை!



இந்தியானாமி காலத்தில்

மாடுகளிற்கு முன்னடைப்பான் கண்டது

நிறைய செத்துப்போயின.


வெகுவாய் பட்டி குறைந்தது

சிலோனாமி படையெடுத்ததும்

கிராமம் ஓடியது.

பட்டி இல்லா தொழிந்தது

என்ன சீவியமிது

ஊரே வீடற்று வெறிச்சென்றது!


வாழ்ந்து பெருகிய மனிதன்

பிடுங்கப்பட்டது போல் சாய்க்கப்பட்ட தென்னை

தென்னை தென்னையாய் அரியப்பட்ட

ஏராளம் இராணுவ பரண்கள்!


இராணுவ மெழுப்பிய மண்முகடு

மறக்கேலா அவச்சாக்கள்

கண்ணியில் காலிழந்த எருதுகள்!

காயம்பட்ட ஆயிரக்கணக்கான தென்னைகள்!


சொல்லாமல் போனவர்

பேருடன் வந்தனர்

எல்லோரும் சொந்தம் பேசினர்

ஆலாத்தி எடுத்தனர்.



காண்டாவனம் காடாய் இருந்தது.

சபிக்கப்பட்ட காலமானதும்

காட்டில் சண்டைகள் நடந்தன.

மின்னல் தெறித்தது முழக்கம் கேட்டது



தளபதிகள் தம் கரங்களைத் தாமே

வெட்டிக் கொண்டதாய் வதந்தி.

பேர் பெற்ற வீரர் மாண்டபோது

சனம் அபத்தமாய் கதைத்தது.

உண்மைகள் வதந்தியாய் பரவின

சனம் பயத்துள் உறைந்தது.



4.

இரவிரவாய்

உடுப்புக் குளத்தில் கூத்தாடினர்

மடார் யோகனும் முட்டுக்காய் கணேசனும்

புள்ளையும் யேக்கப்பும்

குடித்துக் குடித்து ஆடினர்.


காத்தவராயன் இரவிரவாய் அலைந்தான்!

சம்பங்கி தேவடியாள் வீடுகளை தட்டினான்.

மதுரையில் நின்றான்

கப்பலேறி காசிக்குப் போனான்!


மூதேவி வாலாயம் செய்த முனியிடம்

ஆசி பெற்றான்.

தாலி வைத்து சூதாடினான்

வெளியில் போனான்.


சோதனைச் சாவடியில் எரிச்சலூட்டும்

கேள்விகள்

எங்கு போகிறாய் பதரே?

எதற்கு? யாரைப்பார்க்க?


தலைகுனிந்து போனான்.

போகிற வழியில்

பெருநகரில் வரி கொடுத்து திரும்பும்

கணேசனின் தமக்கையைக் கண்டான்.


கணத்திற்குக் கணம் மாறும் செய்திகளாலான

உலகத்தைக் கண்டான்.

களவாய்த் தோணியில் திரும்பினான்.



குளிர்ந்த இரவில் வேட்டை ஆடினான்.

சிங்களக் கிராமத்தில் மாடுகள் திருடி வந்தான்.

கடற்கரையில் அடையலில் ஆம்பல் கிடைத்தது@

கொழுத்த விலை போனது.


கோடையில் அம்மாள் வருத்தம் கண்டது.

அம்மனின் உக்கிர கோபம்

உடலெல்லாம் போட்டது

துடித்துப் போனான்!



வல்லத்து மாகாளி வேப்பிலையுடன் தோன்றினாள்.

அரங்கு அருண்டது

டோலக் அதிர்ந்தது

சபை மிரண்டது!



ஆயன் விழித்து விழித்துப் பார்த்தான்

கூத்தன் ஆடினான்

கூத்தியும் ஆடினாள் விடியுமட்டும்!



கூத்து நடந்த இரவில்

ஆர் ஆருடன் ஓடிப்போயினர்!



பார்த்திபனின் பெண்டு

பிள்ளைகளைத் தவிக்க விட்டு

கண்ணனுடன் ஓடிப்போனாள்!

கண்ணன் மலைக்கோடிய போது

திரும்பி வந்தாள்.


குளத்தங்கரை ஊத்து மண்ணில்

பார்த்திபன் மனைவியுடன் குடி வந்தான்.



புள்ளையின் கவலைகள்

தேங்காய் பறியல் உரியல்

காலை பத்து மணிவரை

பின்னர் கள்ளுக்கொட்டில்

அரச நிவாரணமும் சகாய வேலையும்

இரவில் பெண்டு பின் பிள்ளைகள்


காற்று மாறியது.

கமலனிற்கு மீன் பட்டது.

மடி மாற்றி மடி மாற்றி

லட்சம் லட்சமாய் கொட்டியது!


ஆயன் நாம்பன்களிற்குக் காயடித்தான்!

காயடிக்கையில் இறந்தவை

குறை நலத்துடன் தப்பியவை போக

எருதுகளை நல்ல விலைக்கு விற்றான்!

பட்டி நாம்பன்

ஒய்யாரமாய் உலா வந்தது

பட்டி பெருகியது.



5.

உடல் சிதறி கையிழந்து காலிழந்து

படுக்கையில் முடங்கி

கோரமாயக் கிடக்கும் படுக்கைப் புண்ணுடன்

வேதனைப் பட்டு சோர்ந்தும்

ஜீவன் குன்றா இளைய மண்

கண் முன் பரந்து கிடந்தது.



புண்ணியம் செய்து போன

பிறவிகளிற்கு நன்றி!

போகும் பாதையில் உங்கள் பெயர்களை

வழிகாட்டிகள் திரும்பத் திரும்ப உச்சரித்தனர்.



பேரால மரவிழுதென  ஆதி இருந்தது!


பெருங்குரலெடுத்து

வெகு வேகமாய் நதி போனது.

நாணல் இருந்தது

சேறு இருந்தது

நதி போனது

நிலத்தைக் கிளரக் கிளர

வீரம் விளைந்தது!



இ.

புரிந்து கொள்ளு மட்டும்

காத்திருக்கச் சொல்லிப் போய்விட்டது

கவிதை!

மீதி சொற் கூட்டத்துடன்

மெய்ப் பொருளைத் தேடச்சொல்லி

கடல் பொங்கி ஆர்ப்பரிக்கிறது!



சிறுக்கிகளைப் பற்றிய வலைஞர் பாடல்

வானத்தில் செம்பருந்து

கரையில் துள்ளி வீழும் மீனினம்

கடுகி மடி மாற்றும் மனிதர்

அலைகளிற்கப்பால்

இருண்டு செல்லும் அற்புதக் குகையாய்

வங்களா விரிகுடா!



20.03.1996





சரிநிகர் - இதழ்- 97 (16 மே 1996)

கருத்துகள் இல்லை: