20120321

சுலோ


பிதாவே

உமது நிழலில் விலகியென்

ஆன்மா

வெகுதொலைவில் போனபின்

பெறுதற்கரிய நட்பின்

பிஞ்சு விரல்களைப் பற்றியவாறு

உமது ஆலயத்தின் வாசலில்

ஓர் அந்நியன் போல்.



தூய்மையும் அமைதியுமாய்ப்

பொலிந்த மண்டபத்தில்

வாய்ப்பாடுகளைப் போலிருந்த

எல்லா வசனங்களையும்

ஒதுக்கவிட்டு

தேம்பி நின்ற ஜீவன்களிடையே

அமைதியாய் மண்டியிட்டேன்!


பிதாவே

கீதங்களால் நிரம்பிய

உம் மண்டபத்தில்

என்னருகே மிக இளைய குரல்

உமக்குரிய கீதங்களை இசைத்தது.

அந்தக் கீதங்களைப் பாட

நான் விரும்பினேன்.

தினமும் மரிக்கின்ற தளிர்களும்

நோயால் ஜீவனை இழந்த முகங்களும்

காட்டு அனலும்

வெயிலும்

மனித அவலங்களும் நினைவில் வாழ

மடுமாதா கோயிலில்

ஒதுங்கிய மனிதர்களின்

ஜீவத்துடிப்பாய் எழுந்த

கீதங்களில் எனை இழந்தேன்!


வானத்தில் இருந்து குதித்த

தேவர்களைப் போல்

மனித அவலங்களிடையே

நெகிழ்ந்த ஓரிரு சொற்களுடன் நாம்


நேசமான பார்வைகளைத் தந்த

விழிகளில் திரண்ட

கண்ணீர்த் துளிகளை

நினைவு கூர்வேன்!


அவலம் மிக்கது வாழ்வு

ஆனபோதும்

நாளை பற்றிய செய்தியை ஈய்ந்தோம்.

பிதாவே

பாவங்களின் நிமித்தம்

உம்முன் மண்டியிட்ட

ஜீவன்களிடையே

அமைதியில் தோயும் அவள்

விழிகளின் செய்திகளில்

நான் நிரம்பினேன்.


நான் அற்புதமான

உறவினைப் பின்னினோம்!

தன் பிஞ்சு விரல்களை

என்னிடம் தந்திருந்தாள்.

நிறைய கதைகளைக் கூறினேன்.

கவிதைகள் போலவும்

மனிதர்கள் கடந்து போகையில்

நான் நெகிழ்ந்தேன்!

இன்றென் தசைகளில்

கிளர்ச்சியில்லை.

வேதனை மிகுந்த

நினைவுகளிற்கப்பால்

அமைதியடைந்ததென் ஆன்மா.


பரமபிதாவே

மீளவும்

என்கிடைத்தற்கரிய நட்பின்

பிஞ்சு விரல்களைப் பற்றியவாறு

உம் நிழலில் விலகி

நான் தேடிப் பெற்ற

கவிதைகள் நிறைந்த

என் சோலைக்குள்.


10.06.1991

கருத்துகள் இல்லை: