20120321

திசைகளைத் தேடி



கைகளை ஓங்குவது போலிருக்கும்

பயமுறுத்தும் நோக்கமில்லை

முன்னும் பின்னுமாய் எத்தனை நினைவுகள்


துயரமும் வேதனையும் நிரம்பிய தடங்களில்

பயணம் போன ஏராளம்  கதைகளில்

சிரிக்க முயன்று தோற்ற கணங்களில்

பிடுங்கப்பட்ட வாழ்வு சிரித்தது.


ஆற்றப்படாத சிதையாய் ஆன்மா

எந்த உண்மை இணைத்தது

எந்த பேருண்மை பிரித்தது.

சொல் பயின்று பொருள் பயின்று

இரக்கமற்ற கதையளந்து

பாதி தோல்வியும் பாதி வெற்றியுமாய்

திரும்பிய தலை  நிமிர்வதற்கிடையில்

தலைமுறைகள் மண்ணில் புரண்டன.

சிதைக்கப்பட்ட தளத்தில் கிளம்பும்

சொற்களுக்கு மதிப்பில்லை

இருளாய் படரும் மூப்பும் பிணியும்



ஞானந் தேடிப் போனதொன்று

திரவியந்தேடிப் போனதொன்று

பின்னும் போனவை போக

பிணியூம் நீண்டநாட் பயணமும் வாங்கிப்

புறப்பட்டு போனதெங்கே

நிலவழிந்து பனி தொடங்கும் அதிகாலை

மெல்லென இயற்றப்பட்ட

முதற்காற்றின் தழுவல்

கணஞ் சிலிர்த்தது மேனி

பயின்ற தளங்கள் தளர்ந்து கிடந்தன.



1993


மூன்றாவது மனிதன் இதழ் 10 (ஜனவரி 2001)


கருத்துகள் இல்லை: