20120321

நீறு பூத்த இளமை

 

போதையூட்டும் அலைகளில்

விலகுவது போல்

அண்மித்துக் கொண்டு

பொய்யுறக்கத்துடன்

முடிந்து போன சலனத்தை

நீ இன்னும் எழுது.



நடந்து போனவை பற்றியென்ன

சொல்ல!



தத்துவம் கலைந்து பேனைக் கூர்களின் உரசல்

இசைத்தல் ஆகுமா



ஓடிப்போனதும் நின்று போனதும் போக

எஞ்சி நிற்கும்

ஓரிரு உறவுகளுடன்

வாழ்வை அர்த்தப்படுத்தவென்று

இன்றும் நம்பிக்கை.



புத்தக உலகில்

தனித்தியங்கும் மனிதர் போல்

இன்னும் கொஞ்ச நாட்கள்

அப்பால் .

காடு வாவென்றதும்

வீடு போவென்றதும்

நீயும் உணர்ந்தவை தானே!


வானத்தில் மறைந்து போன

வெள்ளிகளையேன் எண்ணினேன்

எனக்குப் புரியவில்லை!



ஓர் உறுத்தல்

குறுகிய இடைவெளியில்

இரண்டாம் சிதையை மூட்டினேன்.



பிரபஞ்ச மையமே நாமென்ற போதும்

பொய்யுரைத்தேனா?



உனக்குப் புரியாது

அலைகடலில் தத்தளிக்கும்

ஜீவன்கள் அறியும்!



27.04.1992

கருத்துகள் இல்லை: