20120321

அலைகள்


1

ஊர்த்தொழவாரங்களைப் பார்க்கப் போன

மைந்தரின் நினைவுகளை

நான் தருவேன்

அவர்களின் முடிவினை

எனக்குக் கூறுங்கள்!


இத்தனை காலமும்

ஏங்கித் தவித்ததன் அர்த்தமென்ன?

நீங்கள் கூறுங்கள்

தாய்மையின் கதறல்

கேலிக்குரியதா?

கறுப்பு இரவுகளில்

தனிமைச் சிறைகளில்

அடங்கிப் போன அலைகளுடன்

எல்லாம் முடிந்ததா?


2.

உங்கள் கரங்களில்

உயிருடன் இருந்த

ஒவ்வோர் கணத்திற்கும்

அர்த்தம் கோருவேன்!



ஒவ்வொரு கொலையையும்

மகிழ்ந்து சொன்ன போது

மனிதர்கள் இறந்து போனதாகவே

எனக்குக் கேட்டது.

உங்கள் வெற்றிகளைக்

கொண்டாட என்னால் முடியவில்லை

நீங்கள் சிரிக்கக் தானும்

ஒரு பகிடி விட முடியவில்லை!


3.

எம் சோகம் சிறையிருந்த

காலம் போதும்!



செவிடராய் மௌனித்துப் போன

மக்களின் செவிகளில்

அலைகளை மீட்டலாம் வா!



நான் சிந்தனையே

கோருகிறேன்

இரைச்சலை எப்படி

ஏற்க முடியும்?



அமைதி பூத்த இந்தக் காலையில்

இன்னும் நான்

நிறையச் சிந்திக்க வேண்டும்.



31.12.1990








கருத்துகள் இல்லை: