20161226

சிறையிருத்தல்

ஏலோய்ய்யீ..
ஏன் என்னைக் கைவிட்டீர்
உச்சஸ்தாயியில்  எழுந்தது இறுதி ஓலம்
வெள்ளி இரவில் ஆவி ஒடுங்கிற்று
மூன்று நாட்களுக்குள் மீளவும் உயிர்த்தது
இரண்டாம் வாழ்வுக்காய்

வானம் கைதுசெய்தபின்
மண்ணுடனான சம்பந்தம் அற்றுப்போனது
வற்றாத நதியென்ற மாயையும் அழிந்தது
காட்டாறாய் பாய்ந்த நிலமெல்லாம்
வெட்டாந்தறையாய் வெடித்துலர்ந்தது

தலைகீழாய்த் தொங்கி நீரி;ல் மூச்சிழந்து
காவடியாடி நகமிழந்து உடல்சிதைந்து
உணர்விழந்து உயிர் சோர்ந்தது.
கரைசேர முடியாமல் கடல் சேர்ந்தன ஜீவன்கள்

வலியும் நிராசையும்
நெடுநாட்கனவு சிதைந்த வேதனையும்
சுமந்து வரும் இந்நதி எங்கிருந்து ஆரம்பிக்கின்றது.
குக்கிராமத்தின் குடிசையில் இருந்தா
நகரத்தின் முடுக்கில் இருந்தா
வனத்தின் ஒற்றையடிப் பாதையில் இருந்தா
தீவெங்கும் பரந்திருக்கும் சோதனைச்சாவடியில் இருந்தா

தமையாட்கொண்டு நோயும் பிணியும் ஈய்ந்து
வேருடன் பிடுங்கிபெறிந்த
காவல்ஜந்துக்களின் கீர்த்தியினை உச்சரித்துலவும் பாதிமனிதர்கள்
கொடுப்பதை உண்டு, உறங்கி, உயிர்நிறுத்தி
உளப்புண்ணுடன் நாட்கடத்தும் முகமிழந்த மனிதர்கள்

எப்போதோ நாகரிகத்தின் தொட்டிலாய் இருந்த
நதியொன்று அருகே ஓடுகிறது
பெரும் மதில்களுக்கப்பால் பால்மரங்களின் பச்சைநிறம்
கற்பூமியின் அவலமூச்சில்
அவலம் நிறைந்த  முகங்களிடையே
வாழ்வின் அர்த்தம் புரிகிறது.


காலத்தை தேவன் என்றதும் பாசத்தை கயிறு என்றதும்
எடுத்துரைப்பார் எவருமின்றி புரிகிறது
குரு இல்லை பீடம் இல்லை
கல்லால மரத்தடியில்
சொல்லாமல் சொன்ன பொருளும் புரிகிறது
திரும்பவும் திரும்பவும் வேதனை கதவைத் தட்டியது
வெறுத்து திறந்த கணத்தில்
காலவெள்ளம் காபாலத்தை நிறைத்தது

வயல்வெளிகள் கண்களுக்ககப்படவில்லை
பிடித்தமான கடலுமில்லை அலைகளில்லை
கண்களின் சலனத்திரையில்
கரையும் காட்சியில் இனிமையில்லை
ஆதரவாய் தோள்தடவ ஆருமில்லை
நெகிழ்ந்துறங்க நிழலில்லை

வெளியில் இருப்பதாய இரண்டாம் வாழ்வுக்காய்
எத்தனை மாதம் காத்திருப்பது இந்த கருப்பையில்
இரண்டாம் வாழ்வைக் காணாமல்
கொலையான சகாக்களின் ஓலம் இன்னமும் ஒலிக்கின்றன
ஆறவழியின்றி ஆன்மா அடங்கும்

அன்புற்றமைந்த வாழ்வின்
எச்சமாய் வரும் ஓரிரு கடிதங்கள்
நினைவுப் பாதையில் தலைசாய இரவு அழிகிறது
இளமையும் தான்.



2001.11.01

களுகங்கையின் ஓரத்தில் றப்பர் மரங்களிடையே மல்வத்தையில் அமைந்துள்ளது களுத்துறை சிறை. 1997-12-12 இல் சிறையதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் சிங்கள தண்டனைக் கைதிகள்( அச்சு குத்தியவர்கள்) பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்து தமிழ் கைதிகளை தாக்கினர். தர்மலிங்கம், சிவம், ஜெகன் ஆகியோர் வெட்டிக்கொல்லப்பட்டனர். பிற்பாடு 2000 தை 6ம் 7ம் திகதிகளில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனர். இதன் போது யேசுதாசன், சிறீகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: