அதிகாலைகளில் அலாரமற்ற விழிப்பைக்
கலவரப்படுத்தும் நுண்ணோசை!
உற்றுக்கேட்டால் இன்னும் தூரப்போம்
அதிகாலையில் புத்தம்புதியாய்
இயற்றப்படும் காற்றினோசையல்ல
தமை இனங்காட்டா அண்டவொலிகளல்ல.
அழுகுரல்!
முதிர்ந்து
நரம்புகள் சுண்டி
இயக்கங்கெட்டு
பன்னூறு தலைமுறைகளைத் தொலைந்தும்
பிராண்டிப்பிராண்டித் துண்டாடும் நினைவுகளால்
ஆற்றப்படாமலேயிருக்கும் உளப்புண்ணுடன்,
இரவிரவாய் தனிமையில் துவளும்
ஆன்மாவொன்றின் குரலது.
போர்முடிந்ததென்று ஆறுதலாய்த் ஒதுங்கி
அடுத்த கணங்கள் குறித்த அச்சமின்றி
துயில்கொண்ட தளிர்களை வெட்டிச்சாய்த்து
வெற்றிமுழக்கமிட்டு,
எஜமானர்களை குளிர்வித்த காதை.
சாவில்லா வாழ்வை சாபமாய் பெற்றது முதல்
காலாகாலம் வென்றுநிற்கும் கதைகள்.
போரின் பங்கிலாபங்கள் குறித்தெழுந்த பாடல்கள்.
மறப்பதற்கு வழியில்லை
உழல்வதற்கு சபிக்கப்பட்டதனால் போவதற்கும் வழியில்லை
நூற்றாண்டுகளாய்
ஓலக்குரல்களால் நிரம்பும் விடிகாலைகள்.
10 ஓகஸ்ட் 2025
கலைமுகம் இதழ் 80 ஏப்ரல்-டிசெம்பர் 2025
குறிப்பு:
போரின் முடிவில் பாண்டவர்களின் குழந்தைகளையும் கருவில் இருந்து சிசுவையும் கொன்ற அஸ்வதாமன், சாகாமல் யுகம்யுகமாய் வாழ்ந்து துன்பத்திலும் தனிமையிலும் வாழுமாறு சபிக்கப்பட்டான
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக