20251223

ஹே அஸ்வத்தாமா !

அதிகாலைகளில் அலாரமற்ற விழிப்பைக்

கலவரப்படுத்தும் நுண்ணோசை!

உற்றுக்கேட்டால் இன்னும் தூரப்போம்

அதிகாலையில் புத்தம்புதியாய் 

இயற்றப்படும் காற்றினோசையல்ல

தமை இனங்காட்டா அண்டவொலிகளல்ல. 

அழுகுரல்!

முதிர்ந்து

நரம்புகள் சுண்டி 

இயக்கங்கெட்டு

பன்னூறு தலைமுறைகளைத் தொலைந்தும்

பிராண்டிப்பிராண்டித் துண்டாடும் நினைவுகளால்

ஆற்றப்படாமலேயிருக்கும் உளப்புண்ணுடன்,

இரவிரவாய் தனிமையில் துவளும் 

ஆன்மாவொன்றின் குரலது.


போர்முடிந்ததென்று ஆறுதலாய்த் ஒதுங்கி

அடுத்த கணங்கள் குறித்த அச்சமின்றி 

துயில்கொண்ட தளிர்களை வெட்டிச்சாய்த்து

வெற்றிமுழக்கமிட்டு, 

எஜமானர்களை குளிர்வித்த காதை.

சாவில்லா வாழ்வை சாபமாய் பெற்றது முதல் 

காலாகாலம் வென்றுநிற்கும் கதைகள்.

போரின் பங்கிலாபங்கள் குறித்தெழுந்த பாடல்கள்.

 

மறப்பதற்கு வழியில்லை

உழல்வதற்கு சபிக்கப்பட்டதனால் போவதற்கும் வழியில்லை

நூற்றாண்டுகளாய் 

ஓலக்குரல்களால் நிரம்பும் விடிகாலைகள்.



10 ஓகஸ்ட் 2025

கலைமுகம் இதழ் 80 ஏப்ரல்-டிசெம்பர் 2025


குறிப்பு: 

போரின் முடிவில் பாண்டவர்களின் குழந்தைகளையும் கருவில் இருந்து சிசுவையும் கொன்ற அஸ்வதாமன், சாகாமல் யுகம்யுகமாய் வாழ்ந்து துன்பத்திலும் தனிமையிலும் வாழுமாறு சபிக்கப்பட்டான


வடக்கிருத்தல்

மகாபலியை  அணுகிப் 

பணிந்து இரைஞ்சிப் பிச்சையெடுத்து

அடியோடு அழித்தான் வாமனன். 

உயிரோடு புதைந்தன பலதலைமுறைகள்.

வடக்கிருத்தல் என்பது 

முடிவில்லா சதிக்கோட்பாடுகளின் ஊற்றாய் ஆனது


ஆண்டாண்டு காலம் அரசாண்ட மண்ணில்

எழுந்த கதைப்பாடல்களில்  

அடியற்றுப்போன மைந்தருடன் 

மகாபலி மீளவும் உருக்கொண்டான் 

துஞ்சியவர் நினைவுகள் உன்னதப்பட்டு 

தலைமுறைகள் தாண்டியும் 

ஓணம் பண்டிகையாய்  நிலைத்தது தொல்நிலத்தில். 

திருவோண 'விழாவும் 

அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்' (1)


மூலைமுடுக்கெலாம் பெயர்ந்த தலைமுறைகள்

கார்த்திகை நன்னாளில் விளக்கிட்டுரைத்தார்

'மகாபலி கண்திற, மகாபலி கண்திற'


துஞ்சிய தினங்களில் துயறுறுதல்

வென்றவர் மனங்களை வெட்டுமென்பதால் 

வாமன ஜெயந்தியாய்  அது நிலவட்டும் (2)

தோதான நன்னாளில் துயருறுக என்று அரசுகள் ஆர்க்க,

ஏதிரொலித்தது

'உயிரோடு தந்தவரைத்  திருப்பித்தா' 


மைந்தருடன் முரணிப் போருக்கு ஆர்த்;தெழுந்த 

கோப்பெருஞ்சோழன் 

மூத்தோர் சொற்கேட்டு ஆட்சியை விடுத்தான்

அரசுரிமையை விடுத்தும் அவமானந் நெரிக்க 

அழுந்தி அழுந்தி வடக்கிருந்தான்

உண்ணாநோன்பிருந்து உயிர் விட்டான்.

அவனெழுதிய சங்கப்பாடல்களில் 

இன்னமும் துடிக்கிறது அவனிதயம் 


வடக்கிருத்து சாவை வருந்தியழைத்த

பின்னவர் பலருடன் 

ஆண்டபரம்பரைக் கனவுகள் நிழலாய்த் தொடர,

தேடியதேட்டங்களும் 

முதுசங்களும் 

மைந்தர்களும் 

கைவிட்டுப்போனபின்னும் 

கையறுநிலையெனினும் வாழ்ந்தாக வேண்டும். 

தனித்துப்போன பல்லாயிரம் வீடுகளுக்குள்

வடக்கிருக்கும் தனியன்களும் 

தனித்திருக்கும் இணையர்களுமாய்  


மதிப்பழிய அழிய

அம்பலத்தாடும் அடுத்த தலைமுறை. 


புலம்பெயரக்காத்திருக்கும் அடுத்தடுத்த தலைமுறைகள்

குற்றப்பரம்பரையாய் வளர்த்தெடுக்க 

கடைநடத்தும் அந்நியப்பதிவுகள் 

புலம்பெயர்ந்த புட்களும் வடக்கிருக்க வரும் 

நனவிடைத்தோய்ந்து ஏங்கியேகும்.

மொழிபெயர் தேயத்து மயங்கங்களுடன்.

ஒட்டியும் ஒட்டாமலும்

காடாறு மாசம் நாடாறு மாசமாய். 


மூப்புறும் மண்ணின் வேர்களும் விடுபடவிடுபட

மருதமும் நெய்தலும் நல்லியல்பிழந்து பாலையெனும் படிவங்கொள (3)

நீர்மறுத்து அரசியல் செய்யும் அரைமனிதர்களும் வடக்கிருப்பர் 


மாலையானதும் வீடெல்லாம் ஒளியேற்றி

வீதியெலாம் உலாப்போந்து மீளவும் நாமமுரைத்தோம்

மகாபலி கண்திற. 


28 Feb 2025

கலைமுகம் இதழ் 79 ஜனவரி-மார்ச் 2025

Notes

1. ஞானசம்பந்தவரின் பூம்பாவைப் பதிகம். 

2. வாமனன் பிறந்த திகதியும் மகாபலி இறந்ததிகதியும்  ஒன்றென கற்பித்து, வானமஜெயந்தியாக மறுவரைவு செய்யப்படுகிறது. 

3. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்- சிலப்பதிகாரம் 11: 60-7 

அற்புதத்தம்மாள்

கங்கை பாய்ந்த தடங்களிலே

முடிவைக்கண்டிடும்  தவிப்புடன்

யார்யாரோ வாசல்களில் காத்திருந்து

முகங்கொண்டு, நம்பிக்கையை வாங்கி, கைகூப்பி, முறுவலித்து

மீளவும் வருவதற்காய்ப் போய்க்கொண்டும் வந்துகொண்டும்

எப்படி இயன்றது !

கங்கையின் வன்மத்தில் கரைந்தது முப்பதாண்டுகள்! 


18 மே 2022

கலைமுகம் இதழ் 79 ஜனவரி-மார்ச் 2025